இந்தியா

நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் லீக்கானதற்கான எந்த ஆதாரமும் இல்லை: மத்திய மந்திரி

Published On 2024-06-13 11:01 GMT   |   Update On 2024-06-13 11:01 GMT
  • தேர்வின் போது கேள்வித்தாள் வெளியானதாக மாணவர்கள் குற்றச்சாட்டு.
  • 1500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது கேள்வியை எழுப்பியது.

எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 4,750 மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வு எழுதினர்.

இந்த தேர்வின்போது கேள்வித்தாள் வெளியானது என மாணவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில்தான் ஜூன் 4-ந்தேதி நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் 67 மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். மேலும் சில மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். இந்த மதிப்பெண் (718, 719) எந்த வகையில் கணக்கிட்டாலும் வராது என பல மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

அதன்பின் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகவை (National Testing Agency-NTA) சில மாணவர்கள் கடந்த முறை தேர்வு எழுதும்போது நேரம் கடைபிடிக்க முடியாமல் போனது. இதனால் கருணை மனு வழங்கப்பட்டது எனத் தெரிவித்தது. கருணை மனு எப்படி வழங்கப்படலாம் என கேள்விகள் எழுப்பப்பட்டது.

பல்வேறு மாநில அரசுகள் நீட் தேர்வை திரும்ப நடத்த வேண்டும் என வலியுறுத்தின. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்க வந்தது. அப்போது கருணை மனு வழங்கப்பட்ட 1560 மாணவர்கள் மீண்டும் நீட் தேர்வு எழுத வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கான கேளவித்தாள் வெளியானதற்கான எந்த ஆதாரமும் இல்லை என மத்தயி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தர்மேந்திர பிரதான் கூறுகையில் "தேர்வின்போது எந்த கேள்வித்தாள்களும் லீக் ஆகவில்லை. அதற்கான ஆதாரங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சுமார் 1560 மாணவர்களுக்கு நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட மாதிரி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்காக கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வெளிப்படையான தன்மையில் மாணவர்களுக்கு நீதி வழங்கிட இந்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் உறுதிகொண்டுள்ளது. 24 லட்ச மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர்.

4000 மையங்களிலும் இரண்டு செட் கேள்வித்தாள்கள் இருக்கும். தேர்வு நாளில் ஒரு செட் கேள்வித்தாள்களை ஓபன் செய்ய தகவல் தெரிவிக்கப்படும். ஆறு மையங்களில் தவறுதலாக மற்றொரு செட் கேள்வித்தாளை ஓபன் செய்து விட்டார்கள். அதை சரி செய்ய 30 முதல் 40 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இரண்டு செட் கேள்வித்தாள்கள் என்பது புதிது அல்ல. இது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது" என்றார்.

உச்சநீதிமன்றம் மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் எனத் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் கூறுகையில் "1563 மாணவர்கள் மதிப்பெண்கள் ரத்து செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஜூன் 23-ந்தேதி மீண்டும் தேர்வு எழுத முடியும். மாணவர்கள் தேர்வு எழுத்த விருப்பம் இல்லை என்றால், கருணை மதிப்பெண் குறைக்கப்படும். கருணை மதிப்பெண் இல்லாதது அவர்களுடைய இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும். ஆனால், இந்த பெரிய மோசடி கறித்து அரசிடம் இருந்து எந்த பதிலையும் கேட்க முடியவில்லை" என்றார்.

Tags:    

Similar News