பாப்புலர் பிரண்டு அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சீல் வைப்பு
- நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்டு அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- பாப்புலர் பிரண்டு அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
திருவனந்தபுரம்:
இந்தியாவில் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்டு அமைப்புக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்டு அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தியது.
இதில் பல முக்கிய தஸ்தாவேஜூகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் அடிப்படையில் பாப்புலர் பிரண்டு அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது.
என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் கடந்த 23-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது பல இடங்களில் வன்முறையும் மூண்டது.
இதில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் பாப்புலர் பிரண்டு அமைப்பின் நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். நேற்று கோழிக்கோட்டில் உள்ள பாப்புலர் பிரண்டு அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.
இதற்கிடையே தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பாப்புலர் பிரண்டு அமைப்பு நிர்வாகிகளின் காவல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும் என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு வருகிற 20-ந் தேதி வரை 21 நாட்கள் காவலை நீட்டித்து என்.ஐ.ஏ. கோர்ட்டு உத்தரவிட்டது.