இந்தியா

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை: நிதிஷ்குமார்

Published On 2022-06-14 02:04 GMT   |   Update On 2022-06-14 02:04 GMT
  • இதுவரை யார் ஜனாதிபதி வேட்பாளர், எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்பதே தெளிவாகவில்லை.
  • வேட்பாளரை தேர்வு செய்வதற்கு முன்பு, கட்சிகள், கூட்டணி சார்பில் அவர்களுக்குள் வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்படும்.

பாட்னா:

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஜூலை 18-ந் தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு செய்ய இது சரியான நேரம் அல்ல. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியோ அல்லது எதிர்க்கட்சியோ இதுவரை நாட்டின் உயர் பதவிக்கான வேட்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்து எந்த விவாதத்தையும் நடத்தவில்லை. அப்படி இருக்கும்போது முன்கூட்டியே அதுகுறித்து முடிவு செய்ய முடியாது.

2012-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளித்தோம். 2017-ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகித்தபோது அதன் வேட்பாளருக்கு ஆதரவு அளித்தோம். இதுவரை எங்கள் விருப்பப்படி ஆதரவு அளித்தோம். இந்த முறை இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதுவரை யார் ஜனாதிபதி வேட்பாளர், எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்பதே தெளிவாகவில்லை.

வேட்பாளரை தேர்வு செய்வதற்கு முன்பு, கட்சிகள், கூட்டணி சார்பில் அவர்களுக்குள் வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்படும். தற்போதுவரை அதுபோன்ற ஆலோசனையும் நடத்தப்படவில்லை. ஊடகங்களில் நான் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக வந்த தகவல்களிலும் உண்மையில்லை. எனக்கு போட்டியிடும் விருப்பம் சிறிதும் இல்லை" என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News