ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலை சந்தித்தார் நிதிஷ் குமார்
- பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவை நேற்று சந்தித்தார்.
- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை நிதிஷ் குமார் இன்று சந்தித்தார்.
புதுடெல்லி:
பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் நேற்று புதுடெல்லி வந்தார். அங்கு அவர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்துப் பேசினார். டெல்லியில் லாலு மகள் மிசா பார்தியின் வீட்டில் தங்கியிருந்த அவரைப் பார்த்து உடல்நலம் விசாரித்தார்.
லாலு பிரசாத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்து பேசினார். அப்போது துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவும் உடனிருந்தார். அவர்கள் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தனர்.
அதன்பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டியது அவசியம் என தெரிவித்தனர்.