இந்தியா

பாலியல் குற்றவாளிக்கு அரசு வேலை கிடையாது: சட்டீஸ்கர் முதல்வர் அதிரடி

Published On 2023-08-15 11:58 GMT   |   Update On 2023-08-15 12:06 GMT
  • சட்டீஸ்கர்ஹி மொழியில் அவர் உரையை தொடங்கி வரவேற்பை பெற்றார்
  • மாநில அரசாங்கத்தின் எந்த வேலையிலும் சேரும் தகுதியை இழப்பார்கள்

இந்தியாவின் மத்திய பகுதியிலுள்ளது சட்டீஸ்கர் மாநிலம். இதன் தலைநகரம் ரய்பூர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபேஷ் பகேல், அம்மாநில முதல்வராக உள்ளார்.

இன்று இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரய்பூரிலுள்ள காவல்துறை மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பூபேஷ் உரையாற்றினார்.

அம்மாநிலத்தில் சுமார் 1.6 கோடி மக்கள் பேசும் சட்டீஸ்கர்ஹி மொழியில் அவர் உரையை தொடங்கி வரவேற்பை பெற்றார். அப்போது அவர் பல திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது, "பெண்களின் பாதுகாப்பு அதி முக்கியம் வாய்ந்தது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும். பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடுபவர்கள் இனி மாநில அரசாங்கத்தின் எந்த வேலையிலும் சேரும் தகுதியை இழப்பார்கள்" என அறிவித்துள்ளார்.

அம்மாநிலத்தில் நகரங்களில் இருந்து தொலைதூர பகுதியில் வாழும் மாணவர்களும் மாணவிகளும் இந்தியாவின் முக்கிய நுழைவுத்தேர்வுகளை எழுத தங்களை தயார்படுத்தி கொள்ளும் வகையில் ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், பள்ளி பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு போன்ற மென்பொருள் துறையின் உயர் தொழில்நுட்பங்களுக்கான பாடங்கள் சேர்க்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதுபோன்று பல திட்டங்களை பூபேஷ் பகேல் அறிவித்திருந்த போதும், பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்துபவர்களுக்கு அரசு வேலை இல்லை என அவர் கூறியிருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பாக காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News