இந்தியா

திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயத்துக்கு உம்மன்சாண்டி இறுதி ஊர்வலம்- சொந்த ஊரில் நாளை உடல் அடக்கம்

Published On 2023-07-19 11:37 GMT   |   Update On 2023-07-19 11:37 GMT
  • திருவனந்தபுரத்தில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.
  • இறுதி ஊர்வலத்தை முன்னிட்டு கோட்டயத்தில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

திருவனந்தபுரம்:

கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி(வயது79) புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார். பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை காலமானார்.

அப்போது அவரது மனைவி மரியம்மா உம்மன், மகன் சாண்டி உம்மன், மகள்கள் அச்சு உம்மன், மரியா உம்மன் ஆகியோர் உடனிருந்தனர். உம்மன்சாண்டியின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து பெங்களூரு இந்திராநகரில் உள்ள அவரது நண்பரும், முன்னாள் மந்திரியுமான டி.ஜான் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று உம்மன்சாண்டிக்கு அஞ்சலி செலுத்தினர். பின்பு உம்மன்சாண்டியின் உடல் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக திருவனந்தபுரத்தில் தலைமை செயலக தர்பார் அரங்கில் உம்மன்சாண்டியின் உடல் வைக்கப்பட்டது. அங்கு கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.அதனைத்தொடர்ந்து உம்மன்சாண்டியின் உடல் புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் ஆலயத்தில் வைக்கப்பட்டது.

பின்பு கேரள மாநில காங்கிரஸ் மாநில தலைமையகமான இந்திரா பவனுக்கு உம்மன்சாண்டியின் உடல் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதன்பிறகு உம்மன்சாண்டியின் உடல் திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான புதுப்பள்ளியில் உள்ள இல்லத்திற்கு ஊர்வலமாக செல்லப்படுகிறது. ஊர்வலம் திருவனந்தபுரத்தில் இருந்து இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பேருந்தில் அவரது உடல் சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

கட்சியினர் பேருந்தின் முன்னும் பின்னும் கண்ணீர்மல்க நடந்து சென்றனர். நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உம்மன்சாண்டியின் இறுதி ஊர்வல வாகனம் ஊர்ந்து சென்றது. வழிநெடுக பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

உம்மன்சாண்டியின் உடல் கோட்டயம் திருநக்கரை மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்கு நாளை பிற்பகல் 2 மணியளவில் உம்மன்சாண்டியின் உடல் புதுப்பள்ளியில் உள்ள தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சிறப்பு பிரார்த்தனைக்கு பின் உம்மன் சாண்டியின் உடல் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.

நாளை நடைபெற உள்ள இறுதிச்சடங்கின்போது உம்மன்சாண்டிக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசு மரியாதையை அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்துள்ளனர். தான் இறந்த பின் இறுதிச்சடங்கை எளிய முறையில் நடத்தவிரும்புவதாக உம்மன் சாண்டி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தாகவும், அவரது விருப்பப்பட எளிய முறையில் இறுதிச்சடங்கை நடத்தி அடக்கம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உம்மன் சாண்டியின் இறுதி ஊர்வலத்தை முன்னிட்டு கோட்டயத்தில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மதியம் விடுமுறை விடப்பட்டது.

Tags:    

Similar News