இந்தியா

யானை-மனித மோதல்: 5 ஆண்டுகளில் 2,500 பேர் பலி

Published On 2024-07-28 04:16 GMT   |   Update On 2024-07-28 04:16 GMT
  • நாடு முழுவதும் வனப்பகுதியில் யானைகள் தாக்குதலில் 2,500-க்கும் மேற்பட்ட மனிதர்கள் உயிரிழந்துள்ளனர்.
  • மனித-வனவிலங்கு மோதலை கையாள்வது, ஒருங்கிணைந்த துறைகளுக்கிடையேயான நடவடிக்கை ஆகும்.

புதுடெல்லி:

பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணைமந்திரி கீர்த்தி வர்தன் சிங் பதிலளிக்கையில், 'நாடு முழுவதும் வனப்பகுதியில் யானைகள் தாக்குதலில் கடந்த 2019-ல் 587 பேர், 2020-ல் 471, 2021-ல் 557, 2022-ல் 610, 2023-ல் 628 என மொத்தம் 2,500-க்கும் மேற்பட்ட மனிதர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த விவகாரங்களில் வனவிலங்கு வாழ்விடங்களை நிர்வகிப்பது மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களின் முதன்மையான பொறுப்பாகும் என்றும், விலங்குகள் அவற்றின் வாழ்விடங்கள் மற்றும் நடைபாதைகளைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு வழங்கும் புலிகள் மற்றும் யானைகள் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

மனித-வனவிலங்கு மோதலை கையாள்வது, ஒருங்கிணைந்த துறைகளுக்கிடையேயான நடவடிக்கை ஆகும். கடந்த 2021-ம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மனித-வனவிலங்கு மோதல்கள், பயிர் சேதம் உள்ளிட்டவற்றை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

மேலும் இந்த வழித்தடங்களைப் பாதுகாக்கவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், அசாம், சத்தீஸ்கர், தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் தான் யானை தாக்குதல்களில் மனித இறப்புகள் கணிசமாக பதிவாகியுள்ளன.

ரெயில் விபத்துகளில் யானைகள் இறப்பதைத் தடுக்க ரெயில்வே மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்களுக்கு இடையே நிரந்தர ஒருங்கிணைப்புக் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News