பா.ஜனதா ஆட்சியில் மகாராஷ்டிரா மாநிலத்தின் பொருளாதாரம் பின்னோக்கி செல்கிறது- ப.சிதம்பரம்
- பா.ஜனதா ஆட்சியில் மகாராஷ்டிரா மாநிலத்தின் பொருளாதாரம் பின்னோக்கி செல்வதை காணமுடிகிறது.
- 2022-23-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023-24-ல் மகாராஷ்டிராவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.4-ல் இருந்து 7.6 ஆக குறைந்து உள்ளது.
மும்பை:
மகாராஷ்டிராசட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் நேற்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மகாராஷ்டிரா நாட்டின் தொழில் மற்றும் சேவை துறையில் முன்னணி மாநிலமாக உள்ளது. வேளாண்மையிலும் சிறந்து விளங்குகிறது. தற்போது மகாராஷ்டிராதான் நாட்டின் வணிக தலைநகரமாக உள்ளது. ஆனால் இன்னும் எவ்வளவு காலம் மகாராஷ்டிரா நாட்டின் வணிக தலைநகராக இருக்கும் என்பது தெரியவில்லை.
பா.ஜனதா ஆட்சியில் மகாராஷ்டிரா மாநிலத்தின் பொருளாதாரம் பின்னோக்கி செல்வதை காணமுடிகிறது. நாட்டின் முதன்மையான மாநிலமாக மகாராஷ்டிராவை படிப்படியாக முன்னேற்றி கட்டி எழுப்பியது காங்கிரஸ் கட்சி தான்.
2022-23-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023-24-ல் மகாராஷ்டிராவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.4-ல் இருந்து 7.6 ஆக குறைந்து உள்ளது. அதேபோல பற்றாக்குறை ரூ.67 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் கோடியாக அதிகரித்து உள்ளது.
மாநிலத்தின் வேளாண்மை வளர்ச்சி 4.5 சதவீதத்தில் இருந்து 1.9 சதவீதமாக குறைந்து உள்ளது. சேவை துறையின் வளர்ச்சியும் 13-ல் இருந்து 8.3 ஆக சரிந்து இருக்கிறது. மாநிலத்தின் மூலதன செலவினம் ரூ.85 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்த சரிவு நிறுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த சரிவை ஏற்படுத்தியவர்களால் அதை நிறுத்த முடியாது. மகாராஷ்டிராவில் வேலைவாய்ப்பு இல்லை.
மகாராஷ்டிராவில் வேலையில்லா திண்டாட்டம் 10.8 சதவீதமாக உள்ளது. மாத சம்பளம் பெறுவோர் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.