இந்தியா

சிரோமணி அகாலி தளம் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார் சுக்பீர் சிங் பாதல்

Published On 2024-11-16 22:54 GMT   |   Update On 2024-11-17 00:46 GMT
  • சிரோமணி அகாலி தளம் கட்சி தலைவர் பதவியில் இருந்து சுக்பீர் சிங் பாதல் விலகியுள்ளார்.
  • புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெறும்.

சண்டிகர்:

சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சுக்பீர் சிங் பாதல் அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் செயற்குழுவிடம் அவர் சமர்ப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக, கட்சியின் மூத்த தலைவர் தல்ஜித் சிங் சீமா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சுக்பீர் சிங் பாதல் விலகியுள்ளார். புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெறும். தனது தலைமைமீது இதுவரை நம்பிக்கை வைத்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக சுக்பீர் சிங் பாதல் கூறினார் என பதிவிட்டுள்ளார்.

கடந்த 2007 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் சிரோமணி அகாலி தளம் கட்சியின் ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதலை மதரீதியாக குற்றமிழைத்தவர் என்றும், அகால் தக்த் அமைப்பின் ஜாதேதார் என அழைக்கப்படும் ஜியானி ரக்பீர் சிங் அறிவித்தார்.

அகால் தக்த் என்பது சீக்கியர்களின் மிக உயரிய அரசியல் அமைப்பாகும். இந்த அமைப்பின் தலைவர் ஜாதேதார் என அழைக்கப் படுகிறார். கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி, அகால் தக்த் அமைப்பு சுக்பீர் சிங் பாதலை மதரீதியாக குற்றமிழைத்தவர் என அறிவித்த நிலையில், அவருக்கான மதரீதியான தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தச் சூழலில் சுக்பீர் சிங் பாதல் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News