Video: மணிப்பூரில் வெடித்த மக்கள் போராட்டம்.. அமைச்சர்- எம்.எல்.ஏ.க்கள் வீடுகள் சூறை - ஊரடங்கு அமல்
- உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு 5 மாவட்டங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
- பா.ஜ.க. எம்.எல்.ஏ சபம் கொஞ்சகேசு, சபம் நிஷிகந்தா, ஆர்.கே.லிமோ ஆகியோரின் வீடுகள் சூறையாடப்பட்டன
மணிப்பூரில் கடந்த வருடம் தொடங்கிய கலவரத்தின் நீட்சியாக கடந்த வாரம் முதல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தலைநகர் இம்பாலில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜிர்பாம் மாவட்டத்தில் மார் பழங்குடி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் அரமாய் தெங்கோல் பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி புகுந்த கிளர்ச்சியாளர்கள் வீடுகளுக்கு தீ வைத்தனர்.
31 வயது ஆசிரியை ஒருவரை உயிருடன் தீ வைத்து எறிந்தனர். தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை அன்று ஜிர்பாம் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் மாயமாகினர். தீ வைத்து எரிக்கப்பட்ட 2 மெய்த்தேய் முதியவர்கள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மாயமானவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில் போரோபெக்ராவில் இருந்து 16 கி.மீ. தொலைவில் ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டன.
இன்றைய தினம் மேலும் 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த 6 உடல்களும் மாயமானவர்களின் உடல்கள் என்று கருதப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த செய்தி பரவியதால் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு 5 மாவட்டங்களில் போராட்டம் வெடித்துள்ளது. மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு கூடுதல் காவல்துறையும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது., இம்பாலில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் மார்க்கெட்டுக்கு செல்லும் சாலைகளை மறித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 2 அமைச்சர்கள் மற்றும் 3 எம்.எல்.ஏக்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் சூறையாடியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ சபம் கொஞ்சகேசு, சபம் நிஷிகந்தா, ஆர்.கே.லிமோ ஆகியோரின் வீடுகள் சூறையாடப்பட்டன. நிலைமை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதால் இம்பால் மேற்கு மாவட்டத்தில் மீண்டும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.