இந்தியா

10 குழந்தைகள் உடல் கருகி மரணித்த அரசு மருத்துவமனையில் உ.பி. துணை முதல்வருக்கு வி.ஐ.பி. வரவேற்பு - சர்ச்சை

Published On 2024-11-16 14:39 GMT   |   Update On 2024-11-16 14:39 GMT
  • வாடையை மறைக்க பாதைகளில் சுண்ணாப்பு தெளித்து குப்பைகளை அகற்றினர்.
  • குழந்தைகள் தீயில் எரிந்து சாகும்போது பாஜக அரசு தனது முகத்திற்கு பாலிஷ் போடுவதில் பிஸியாக உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் வார்டில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் 10 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன. 44 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

 

குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் சிக்கிய மேலும் சில குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீயில் உடல் கருகி உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்குப் பிரதமர் மோடி ரூ.2 லட்சம் அறிவித்துள்ளார்.

பிள்ளைகளை இழந்த குடும்பங்கள் இடிந்துபோயுள்ள இந்த சோகமான சூழலுக்கு மத்தியிலும், மருத்துவமனையைப் பார்வையிட வந்த உத்தரப் பிரதேச ஆளும் பாஜக துணை முதல்வர் பாரேஷ் பாதாக் வருகைக்காக மருத்துவமனையில் விஐபி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி. துணை முதல்வர் வருகையை முன்னிட்டு 10 குழந்தைகள் எரிந்து கருகிய அந்த மருத்துவமனை வளாகத்துக்குள் உள்ள பாதைகளையும், மருத்துவமனைக்கு உள்ளேயும் ஊழியர்கள் அவசர அவசரமாக சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சடலங்களின் வாடையை மறைக்க பாதைகளில் சுண்ணாப்பு தெளித்தும் மேற்படி வேலை பார்த்துள்ளனர். இந்த விஐபி வரவேற்பு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கடும் கண்டனங்களை குவித்து வருகிறது.

இந்த வீடியோவை பகிர்ந்து கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, பாஜக அரசின் துளியும் உணர்ச்சியற்ற செயலை பாருங்கள். ஒரு புறம் குழந்தைகள் உடல் கருகி மரணித்துள்ளனர் , அவர்களின் குடும்பங்கள் அழுத்து ஓலமிட்டுகொண்டின்றன. மறு புறம் துணை முதல்வரை வரவேற்கப் பாதைகளில் சுண்ணாம்பு தெளிக்கப்பட்டு வருகிறது.

துணை முதல்வரின் வருகைக்காக மருத்துவமனை வளாகம் முழுவதிலும் அவசர அவசராமாக குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மைப் பணிகள் நடத்துள்ளதென குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் கூறுகின்றனர். இதுதான் இந்த பாஜக அரசின் அலட்சியப் போக்கின் உச்சம். குழந்தைகள் தீயில் எரிந்து செத்துக்கொண்டிருக்கின்றனர், ஆனால் இந்த அரசு தனது முகத்திற்கு பாலிஷ் போடுவதில் பிஸியாக உள்ளது. என்ன ஒரு வெட்கக்கேடான செயல் என்று சாட்டியுள்ளது.

இதற்கிடையே விஐபி வரவேற்பு சர்ச்சையானது அடுத்து தனது வருகைக்கு சிறப்பு ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உ.பி. துணை முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு மத்தியில் இந்த விபத்து தொடர்பாக உ.பி. அரசின் மெத்தனப் போக்கை காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி ஆகியோரும் விமரித்துள்ளனர். 

Tags:    

Similar News