இந்தியா

(கோப்பு படம்)

இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த ரூ.30,000 கொடுத்தது பாகிஸ்தான் உளவுத்துறை- பயங்கரவாதி அதிர்ச்சி தகவல்

Published On 2022-08-24 21:34 GMT   |   Update On 2022-08-24 21:34 GMT
  • இந்திய ராணுவம் மூன்று ஊடுருவல் முயற்சிகளை முறியடித்தது.
  • இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உயிரிழப்பு,

ஸ்ரீநகர்:

கடந்த 72 மணி நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளின் மூன்று ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப் பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அக்னூர் செக்டரில் உள்ள பல்லன்வாலா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. முன்னதாக ஆகஸ்ட் 21 அன்று, நௌஷேராவின் ஜங்கர் செக்டாரில் பணியில் இருந்த ராணுவ வீரர்கள், அதிகாலையில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் நடமாட்டத்தைக் கண்டனர். அவர்களில் ஒருவன் இந்திய போஸ்ட் அருகே வந்து வேலியை வெட்ட முயன்றான்.

இதையடுத்து அந்த பயங்கரவாதி மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உயிருடன் பிடித்தனர். உடனடியாக அந்த பயங்கரவாதிக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு உயிர்காக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிடிபட்ட பயங்கரவாதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி மாவட்டத்தில் உள்ள சப்ஸ்கோட் கிராமத்தில் வசிக்கும் தபாரக் உசேன் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் நடைபெற்ற விசாரணையில், இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததை பயங்கரவாதி ஒப்புக்கொண்டான். பாகிஸ்தான் உளவுத்துறை சேர்ந்த கர்னல் யூனுஸ் சௌத்ரி என்பவர் தனக்கு 30,000 பாகிஸ்தான் ரூபாயை கொடுத்து அனுப்பியதாக தபாரக் உசேன் தெரிவித்தான்.

இந்நிலையில் கடந்த 22ந் தேதி ஜம்முகாஷ்மீரின் நௌஷேரா மாவட்டத்தின் லாம் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்ட முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் கண்ணிவெடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்களை கைப்பற்றிய ராணுவ வீரர்கள் ஏராளமான வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News