பத்ரா சால் முறைகேடு வழக்கில் சஞ்சய் ராவத்திடம் மேலும் 4 நாள் விசாரணை
- சஞ்சய் ராவத் மனைவிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
- சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவின் வங்கி கணக்கில் ரூ.1.08 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மும்பை :
மும்பையில் 'பத்ரா சால்' என்ற குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்த முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்தை விசாரணைக்கு அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை கடந்த 1-ந் தேதி அதிகாலையில் அதிரடியாக கைது செய்தனர். சஞ்சய் ராவத்தை போலீசார் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது, அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பத்ரா சால் முறைகேடு மூலம் ரூ.1 கோடியே 6 லட்சத்தை பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
இதையடுத்து அவரை 4-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. சஞ்சய் ராவத்தின் காவல் முடிவடைந்த நிலையில் நேற்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், "விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம், அலிபாக்கில் உள்ள சொத்துகளை சஞ்சய் ராவத் வாங்கியதில் கணிசமான பண பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும், எனவே காவலை நீட்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் விவரங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. விசாரணைக்கு ஒத்துழைக்க அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
மேலும் சஞ்சய் ராவத் குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் ரூ.1.17 கோடியை அலிபாக் சொத்துக்களுக்காக பயன்படுத்தி உள்ளார். இதற்கு முன்பு விசாரணையில் வெளிவந்த ரூ.1.06 கோடியை அவர் கூடுதலாக பயன்படுத்தி உள்ளார்.
சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவின் வங்கி கணக்கில் ரூ.1.08 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வர்ஷா ராவத்திடம் அமலாக்கத்துறை விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இருவரிடமும் ஒன்றாக விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, மேலும் சில பணபரிமாற்றம் குறித்த தகவல் வெளிவந்து இருப்பது விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று குறிப்பிட்டார்.
மேலும் சஞ்சய் ராவத்தின் அமலாக்கத்துறை காவலை வருகிற 8-ந் தேதி வரை நீடித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
முன்னதாக அமலாக்கத்துறை காவலின்போது தன்னை காற்றோட்டம் இல்லாத அறையில் வைத்து இருந்ததாக நீதிபதியிடம் சஞ்சய் ராவத் தெரிவித்தார். ஆனால் இதை மறுத்த அமலாக்கத்துறை வக்கீல், "ஏ.சி. வசதி இருந்ததால் அறையின் ஜன்னல் அடைக்கப்பட்டு இருந்தது" என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத், எனது உடல்நல பிரச்சினையால் ஏ.சி. வசதியை என்னால் பயன்படுத்த முடியாது" என்றார்.
இதையடுத்து காற்றோட்டமான அறை வசதியை உறுதிப்படுத்த வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா இன்று விசாரணைக்காக அமலாக்கத்துறை முன் இன்று(வெள்ளிக்கிழமை) ஆஜராகலாம் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் சஞ்சய் ராவத்தின் மனைவிக்கும் சம்மன் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.