null
நாட்டை பிளவுபடுத்த பிரதமர் மோடி பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறார்-ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு
- கேரளாவுக்கு வருவதை நான் பெருமையாக உணர்கிறேன்.
- சமூகத்தை பாதுகாக்க கேரளாவில் உள்ள அமைப்பை பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக் கோட்டில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
கேரளாவுக்கு வருவதை நான் பெருமையாக உணர்கிறேன். அதே சமயத்தில் பொறாமையாகவும் உணர்கிறேன். ஏனென்றால் இங்குள்ள மக்கள் எந்த வகுப்புவாத சக்திகளையும் கேரளாவுக்குள் அனுதிக்க மாட்டார்கள். இந்த இக்கட்டான நேரத்திலும் இந்தியாவுக்கே முன்மாதிரியாக கேரளா உள்ளது.
சமூகத்தை பாதுகாக்க கேரளாவில் உள்ள அமைப்பை பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும். கேரளாவுக்கு ஒவ்வொருமுறை வருகைக்கு பிறகும், வகுப்புவாத சக்திகளை எதிர்த்து போராடுவதற்கான உத்வேகத்தை நான் மீண்டும் பெறுகிறேன்.
தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிட ராகுல் காந்தியை சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் அது பலனளிக்க வில்லை. எனது தலைவர் கேரளாவில் போட்டியிடுவதில் எனக்கு பொறாமையாக இருக்கிறது. கேரளாவை தன் குடும்பம் போன்று உணர்வதால் இங்கு போட்டியிடுவதாக என்னிடம் ராகுல்காந்தி கூறினார்.
பிரதமர் மோடி ஒரு ராஜா போன்று செயல்படுகிறார். மக்கள் அவருக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுத்தனர். அதனை அவர் தவறிவிட்டுவிட்டார். அவர் மக்களுக்காக எதையும் செய்யவில்லை. எனவே இந்த முறை மக்களவை தேர்தலில் மக்கள் அவரை தோற்கடிப்பார்கள்.
பிரதமர் மோடி நாட்டை பிளவுபடுத்த பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறார். அது சரியல்ல. குறிப்பிட்ட சமூகத்தை பற்றி தவறாக பேசுவது பதவிக்கு ஏற்புடையதல்ல. அது நாட்டுக்கும் நல்லதல்ல. பதவிக்கு வருவதற்கு முன்பு அவர் வேறு விதமாக பேசினார். ஆனால் இன்று பதவிக்கு வந்தவுடன் இதுபோன்ற விஷயங்களை சொல்வது சரியல்ல.
இவ்வாறு அவர் பேசினார்.