இந்தியா

கொச்சியில் அரிசிக்கொம்பன் யானையை மீண்டும் கேரளாவில் விடக்கோரி யாகம்-பேரணி

Published On 2023-06-11 06:38 GMT   |   Update On 2023-06-11 06:38 GMT
  • அரிசிக்கொம்பன் காதில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் தரும் சிக்னல் மூலம் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
  • அரிசிக்கொம்பனை மீண்டும் கேரள வனத்திலேயே விட வேண்டும் என கொச்சியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் ரேஷன் கடைகளை குறி வைத்து தாக்கி அரிசியை சாப்பிட்டதால் அரிக்கொம்பன் என்ற பெயர் பெற்ற யானை, மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால் அதனை வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் பெரியார் வன காப்பகத்தில் விடப்பட்ட அரிக்கொம்பன், தமிழகத்தின் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் அரிசிக்கொம்பன் என்ற பெயருடன் மக்களை அச்சுறுத்தியது. பின்னர் பலத்த போராட்டங்களுக்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி அரிசிக்கொம்பனை பிடித்த வனத்துறையினர், அதனை திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வனச்சரகம் அப்பர் கோதையாறு பகுதியில் விட்டனர்.

தொடர்ந்து அரிசிக்கொம்பன் காதில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் தரும் சிக்னல் மூலம் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

அப்பர் கோதையாறு, குற்றியார், முத்துக்குழிவயல் என 5 கிலோ மீட்டருக்குள்ளேயே அரிசிக்கொம்பன் சுற்றி வந்தபோதும், குமரி மற்றும் நெல்லை மாவட்ட மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்துடனேயே உள்ளனர். அவர்கள் அரிசிக்கொம்பனை இங்கிருந்து அகற்றி கேரள வனத்திற்கு அனுப்புமாறு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆனால் அரிசிக்கொம்பனை கண்காணித்து வரும் 2 மாவட்ட வனத்துறையினரும், மக்கள் அச்சப்பட தேவையில்லை. வனத்தில் அமைதியான சூழல், உணவு, குளிர்ந்த தண்ணீர் போன்றவை கிடைப்பதால் அரிசிக்கொம்பன் அங்கிருந்து வராது. அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் அரிசிக்கொம்பனை மீண்டும் கேரள வனத்திலேயே விட வேண்டும் என கொச்சியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி அவர்கள், பாலக்காடு அருகே உள்ள கணபதி கோவிலில் யாகமும் நடத்தினர். 2 மணி நேரம் நடைபெற்ற இந்த யாகத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும் கொச்சி மரைன் டிரைவ் பகுதியில் பேரணியும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள், அரிசிக்கொம்பன் யானையை மீண்டும் கேரளாவுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினர்.

Tags:    

Similar News