இந்தியா (National)

ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம்: உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி

Published On 2024-10-04 01:33 GMT   |   Update On 2024-10-04 01:33 GMT
  • இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் பதற்றம்.
  • எண்ணெய் சப்ளை பாதிக்கப்படும் என பெரும்பாலான நாடுகள் அச்சம்.

ஹிஸ்புல்லா தலைவரை இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தி கொலை செய்தது. இதற்குப் பதிலடியாக ஈரான் நேரடியாக கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்குதல் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேலுக்கான பாதுகாப்பை உறுதி செய்வோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும் ஈரான் எண்ணெய் ஆலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது குறித்து விவாதித்து வருகிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் சிரியா மீதும் தாக்குதல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன்காரணமாக இஸ்ரேல்- ஈரான் இடையிலான பதற்றம் லெபனான், சிரியா வரை விரிவடைந்த நிலையில் மேலும் மேற்கு ஆசியா வரை இந்த பதற்றம் விரிவடையும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் கேபினட் கமிட்டியுடன் பிரதமர் மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி, பாதுகாப்புத்துறை மந்திரி, வெளியுறவுத்தறை மந்திரி, நிதி மந்திரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை வீசிய பிறகு மத்திய கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

ஈரான்- இஸ்ரேல் இடையிலான தற்போதைய மோதல் மேற்கு ஆசியாவிற்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பதற்றத்தால் நாட்டின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

வணிகம், போக்குவரத்து, கச்சா எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் இராஜதந்திரம் மற்றும் உரையாடல் மூலமாக அனைத்துப் பிரச்சினைகளையும் அவசரமாகத் தீர்க்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. தற்போதைய மோதல் ஒரு பரந்த பிராந்திய பரிமாணத்தை எடுக்கக்கூடாது எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News