கொரோனா அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை
- கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
- தொற்று வேகமாக பரவுவதற்கான காரணங்கள் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு சமீப நாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பானது, கடந்த 19-ந்தேதி ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,134 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 7026 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கொரோனா மீண்டும் வேகமாக பரவுவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு பிரதமர் சில ஆலோசனைகளை வழங்க உள்ளார்.