கண்டிப்பாக கேட்க வேண்டும்: அனுராக் தாகூரின் மக்களவை பேச்சை பாராட்டிய பிரதமர் மோடி
- இந்தியா கூட்டணியின் மோசமான அரசியலை அம்பலப்படுத்தும் வகையில் உண்மைகள் மற்றும் நகைச்சுவையின் சரியான கலவை.
- என்னுடைய இளம் மற்றும் ஆற்றல்மிகுந்த சக எம்.பி. அனுராக் தாகூரின் இந்த பேச்சை கண்டிப்பாக கேட்க வேண்டும்.
மக்களவையில் இன்று சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கும், பாஜக எம்.பி.யுமான அனுராக் தாகூருக்கும் இடையில் கடும் விவாதம் நடைபெற்றது.
அரசியல் ரீதியாக அனுராக் தாகூர் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் அனுராக் தாகூரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "என்னுடைய இளம் மற்றும் ஆற்றல்மிகுந்த சக எம்.பி. அனுராக் தாகூரின் இந்த பேச்சை கண்டிப்பாக கேட்க வேண்டும். இந்தியா கூட்டணியின் மோசமான அரசியலை அம்பலப்படுத்தும் வகையில் உண்மைகள் மற்றும் நகைச்சுவையின் சரியான கலவை." எனக் குறிப்பிட்டுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அனுராக் தாகூர் கூறிய கருத்து மக்களவையில் கடும் அமளியை ஏற்படுத்தியது. அதேபோல் நேற்று சக்கரவியூகம் தொடர்பாக ராகுல் காந்தி பேசியதற்கும் அனுராக் தாகூர் பதில் அளித்திருந்தார்.
முன்னதாக, அனுராக் தாகூர் சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள். முன்னாள் பிரதம மந்திரி ராஜிவ் காந்தி மக்களவையில் ஓபிசி இடஒதுக்கீட்டை எதிர்த்தார் என்பதை சபாநாயகருக்கு நினைவூட்ட விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.
அதற்கு ராகுல் காந்தி "நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம். ஆனால் நாங்கள் பாராளுமன்றத்தில் ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நிறைவேற்றுவோம்" என்றார்.