வெள்ளி விழா நினைவு தினம்: பிரதமர் மோடி நாளை கார்கில் பயணம்
- பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் கார்கிலில் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம்.
- கார்கில் போர் முடிந்து 25-வது ஆண்டு என்பதால் பிரதமர் மோடி அங்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
புதுடெல்லி:
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கார்கில் போரின் 25-வது நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை கார்கில் செல்கிறார். அங்கு நடக்கும் நினைவு நாளில் பங்கேற்று நினைவு ஸ்தூபியில் பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார்.
கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 9.20 மணியளவில் கார்கில் போர் நினைவிடத்திற்குச் செல்கிறார். அங்கு கடமையின்போது உயிர் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் கார்கிலில் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். கார்கில் போர் முடிந்து இந்த முறை 25-வது ஆண்டு என்பதால் பிரதமர் மோடி அங்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு வீரர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார்.
மேலும், ஷின்குன் லா சுரங்கப்பாதைத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் 4.1 கி.மீ நீளமுள்ள இரட்டை குழாய் சுரங்கப்பாதையைக் கொண்டது. இந்த சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டால் இது உலகின் மிக உயரமான சுரங்கப்பாதையாக இருக்கும்.