பிரதமர் தினமும் 16 மணி நேரம் உழைக்கிறாரு.. நாராயண மூர்த்திக்கு ஆதரவளித்த சி.இ.ஒ. - யார் தெரியுமா?
- நாராயண மூர்த்தியின் கருத்துக்களுக்கு முழு மனதுடன் ஆதரவு.
- பிரதமர் நரேந்திர மோடி தினமும் 14 மணி நேரம் என 7 நாட்களும் உழைக்கிறார்.
இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கருத்து தெரிவித்து இருந்தார். இவரது கருத்துக்கு பலதரப்பட்ட பதில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. சிலர் இவரது கருத்து ஆதரவும், பலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், ஜெ.எஸ்.டபிள்யூ. நிறுவன தலைவர் சஜ்ஜன் ஜிந்தால் இன்ஃபோசிஸ் நிறுவனரின் கருத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் நாராயண மூர்த்தியின் கருத்துக்களுக்கு முழு மனதுடன் ஆதரவு தெரிவிக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில், "நாராணய மூர்த்தியின் கருத்தை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். இதனை வெறும் மனஅழுத்தமாக மட்டும் பார்க்காமல், அதனை அர்ப்பணிப்பாக கருத வேண்டும். 2047-க்குள் நாம் இந்தியாவை பொருளாதாரத்தில் வல்லமைமிக்க சக்தியாக மாற்ற வேண்டும். இதன் மூலம் நாம் அனைவரும் பெருமை கொள்ள முடியும்."
"நம்மை போன்ற வளரும் நாட்டில் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் வேலை என்ற கலாசாரம் உகந்தது இல்லை. நமது பிரதமர் நரேந்திர மோடி தினமும் 12 முதல் 14 மணி நேரம் என வாரத்தின் ஏழு நாட்களிலும் உழைக்கிறார். நான் தினமும் 10 முதல் 12 மணி நேரம் உழைக்கிறேன். நாம் செய்யும் வேலை மற்றும் தேசத்தை வளர்ப்பதில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்," என்று தெரிவித்து இருக்கிறார்.
இவரது கருத்துக்கு நெட்டிசன்கள் காட்டமான பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், பதில் அளித்த ஒருவர், "பொது போக்குவரத்தை பயன்படுத்தி, வாரத்திற்கு 70 மணி நேரம் உங்களால் வேலை பார்க்க முடியுமா? தனிப்பட்ட வாழ்க்கையை எப்போது நடத்துவது? அதனை அப்படியே விட்டுவிட வேண்டுமா? நமது பிரதமரின் பெயரை பயன்படுத்தி உங்களது இழிவான கருத்துக்களை திணிக்காதீர்கள். உலகிலேயே அதிகளவு பணியாற்றும் வேலையாட்களாக இந்தியர்கள் தான் இருக்கிறார்கள்," என்று தெரிவித்து உள்ளார்.