இந்தியா

ஜெயில்களில் இடம் இல்லாததால் கைது செய்யப்பட்ட 11,500 பேரை ஜாமினில் விடுவித்த போலீசார்

Published On 2024-05-22 05:17 GMT   |   Update On 2024-05-22 05:17 GMT
  • பூஜப்புரா மத்திய ஜெயிலில் உள்ள 12 பிளாக்குகளிலும் இரு மடங்குக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர்.
  • கைதிகள் உட்காரக் கூட இடம் இல்லாத நிலையே அனைத்து ஜெயில்களிலும் இருப்பதாக கூறப்படுகிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், தேடப்படும் குற்றவாளிகள், போதை பொருட்கள் விற்பவர்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவதாகவும், இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் ரவுடிகளை பிடிப்பதற்காக அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

ஆபரேசன் ஏ.ஏ.ஜி. மற்றும் ஆபரேசன்-டி என்ற பெயரில் கடந்த 6 நாட்களாக மாநிலம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். போலீசாரின் இந்த ஆபரேசனில் ரவடிகள், தலைமறைவு குற்றவாளிகள், போதை பொருட்கள் விற்றவர்கள், குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என 12ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் கேரள மாநில ஜெயில்களில் கைதிகளை அடைக்க இடம் இல்லை. இதன் காரணமாக போலீசார் நடத்திய சிறப்பு ஆபரேசனில் கைது செய்யப்பட்டவர்களை சிறைகளில் அடைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பூஜப்புரா மத்திய ஜெயிலில் உள்ள 12 பிளாக்குகளிலும் இரு மடங்குக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். கண்ணூர், விய்யூர் ஜெயில்களிலும் இதே நிலைதான் நிலவுகிறது. கைதிகள் உட்காரக் கூட இடம் இல்லாத நிலையே அனைத்து ஜெயில்களிலும் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தற்போது கைது செய்யப்பட்ட 12 ஆயிரம் பேரில் 500 பேர் மட்டுமே ஜெயிலிகளில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள 11 ஆயிரத்து 500 பேர் போலீஸ் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தினமும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமினில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

727 கைதிகள் அடைக்கப்பட வேண்டிய பூஜப்புரா மத்திய ஜெயிலில் 1,350 கைதிகளும், 585 கைதிகள் அடைக்கப்படவேண்டிய விய்யூர் ஜெயிலில் 1,110 கைதிகளும், 856 கைதிகள் அடைக்கப்படவேண்டிய கண்ணூர் ஜெயிலில் 1,140 கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News