இந்தியா

திருப்பதி கோவிலில் அக்டோபர் 4-ந் தேதி பிரமோற்சவம் தொடங்குகிறது

Published On 2024-07-01 04:26 GMT   |   Update On 2024-07-01 04:26 GMT
  • 11-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இரவு குதிரை வாகனத்திலும், 12-ந் தேதி புஷ்ப பல்லுக்கு வாகன சேவை நடைபெறுகிறது.
  • சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படும்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அக்டோபர் 4-ந்தேதி அதிகாலை பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

5-ந்தேதி காலை சின்ன ஷேச வாகனம், இரவு அம்ச வாகனம், 6-ந் தேதி சிம்ம வாகனம், இரவு முத்து பந்தல் வாகனம், 7-ந் தேதி கல்ப விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகன உற்சவம் நடக்கிறது.

8-ந்தேதி காலை மோகினி அவதாரத்தில் எழுந்தருளுகிறார். இரவு கருட சேவை நடக்கிறது. தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

9-ந் தேதி காலை 6 மணிக்கு தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அனுமந்த வாகனத்திலும், இரவு கஜ வாகனத்திலும், 10-ந் தேதி சூரிய பிரபை வாகனமும், இரவு சந்திர பிரபை வாகன உற்சவம் நடைபெற உள்ளது.

11-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இரவு குதிரை வாகனத்திலும், 12-ந் தேதி புஷ்ப பல்லுக்கு வாகன சேவை நடைபெறுகிறது.

இதையடுத்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

சாதாரண பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்யும் வகையில் பிரமோற்சவ விழா நாட்கள் நடைபெறும் நாட்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News