இந்தியா

நாற்காலியில் குழந்தை பிரசவித்த கர்ப்பிணி- டாக்டர், 4 செவிலியர்கள் சஸ்பெண்ட்

Published On 2024-08-24 05:51 GMT   |   Update On 2024-08-24 05:51 GMT
  • பிரசவம் பார்க்க டாக்டர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • கர்ப்பிணி நாற்காலியில் குழந்தை பிரசவித்த சம்பவம் அப்பகுதியில் இருந்த நோயாளிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நெரெடி கும்மாவை சேர்ந்தவர் அஸ்வினி. நிறைமாத கர்ப்பிணியான அஸ்வினிக்கு நேற்று முன் தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது.

உறவினர்கள் அவரை பிரசவத்திற்காக தேவார கொண்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பிரசவம் பார்க்க டாக்டர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் நல்கொண்டா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டர் நிகிதா மற்றும் செவிலியர்கள் அஸ்வினியை பரிசோதித்து விட்டு பிரசவத்திற்கு இன்னும் கால அவகாசம் ஆகும் என தெரிவித்தனர்.

30 நிமிடங்களுக்கு பிறகு அஸ்வினியை நடை பயிற்சி செய்யுமாறு தெரிவித்தனர். அப்போது அஸ்வினிக்கு பிரசவ வலி அதிகரித்ததால் அங்கு இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.

நாற்காலியில் உட்கார்ந்த அஸ்வினிக்கு குழந்தை பிறந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த செவிலியர்கள் அஸ்வினியை பிரசவ வார்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

கர்ப்பிணி நாற்காலியில் குழந்தை பிரசவித்த சம்பவம் அப்பகுதியில் இருந்த நோயாளிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்காமல் கால தாமதம் செய்து பணியில் அலட்சியமாக இருந்த டாக்டர் நிகிதா, செவிலியர்கள் விஜயலட்சுமி, சைதம்மா, மவுனிகா, சரிதா ஆகியோர் சஸ்பெண்டு செய்து கலெக்டர் நாராயண ரெட்டி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News