புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்கா நீக்கம்.. குடியரசு தலைவர் ஒப்புதல்
- அமைச்சர் பதவியில் இருந்து சந்திர பிரியங்கா உடனடியாக நீக்கம்.
- ராஜினாமா கடிதத்தில் சாதி, பாலின தாக்குதலுக்கு உள்ளானதாக அவர் குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி மாநில அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்கக் கோரி முதலமைச்சர் ரங்கசாமி வழங்கிய அறிவுரையை ஏற்றுக் கொள்வதாக குடியரசு தலைவர் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி அரசுக்கு அனுப்பி வைத்து இருக்கிறது.
அந்த அறிக்கையில், "புதுச்சேரி முதல்வரின் அறிவுரையை தொடர்ந்து புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து, அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியில் இருந்து சந்திர பிரியங்கா உடனடியாக நீக்கம் செய்யப்படுகிறார்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதே அறிக்கையை குடியரசு தலைவரின் செயலாளர் ராஜீவ் வர்மா வெளியிட்டு உள்ளார். முன்னதாக புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்க வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் அக்டோபர் 8-ம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து இருந்தார்.
இதைத் தொடர்ந்து அக்டோபர் 10-ம் தேதி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக சந்திர பிரியங்கா அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தில் சாதி, பாலின தாக்குதலுக்கு உள்ளானதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.