இந்தியா

இன்று மாலை கேரளா செல்கிறார் பிரதமர் மோடி

Published On 2024-01-16 10:52 GMT   |   Update On 2024-01-16 10:52 GMT
  • இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளா வருகிறார்.
  • விமானம் மூலம் கொச்சிக்கு வரும் பிரதமர் மோடி ரோடு-ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இன்று மாலை கேரளா செல்லும் பிரதமர் மோடி எம்.ஜி ரோட்டில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் இருந்து எர்ணாகுளத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வரை ரோடு ஷோ செல்கிறார். அதனை தொடர்ந்து, நாளை கொச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி குருவாயூர் செல்கிறார். குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கு நடக்கும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி-யும் நடிகருமான சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.

அதன் பின்னர் காலை 10 மணிக்கு திரிச்சூர் மாவட்டம் திரிபிராயர் ஸ்ரீராமசுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார். அங்கிருந்து கொச்சிக்கு திரும்பும் பிரதமர் மோடி, கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்பு சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் 6 ஆயிரம் பேர் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதன் பிறகு டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மோடி வந்து செல்லும் வரை, குருவாயூர் கோவில் மற்றும் திரிபிராயர் ஸ்ரீராமசுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி கிடையாது. பிரதமர் புறப்பட்டு சென்ற பின்னரே, பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் வருகையால், காலை குருவாயூர் கோவிலில் நடைபெற இருந்த 39 திருமணங்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

மோடி வருகையை முன்னிட்டு கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அவர் ரோடு-ஷோ மேற்கொள்ளும் இடங்கள், குருவாயூர் கிருஷ்ணர் கோவில், திரிபிராயர் ஸ்ரீராமசுவாமி கோவில், கொச்சி கப்பல் கட்டும் தளம், எர்ணாகுளம் அரசு விருந்தினர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News