ஓடுபாதையில் சறுக்கி பாதியாக உடைந்த ஜெட் விமானம் - மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு!
- மும்பை விமான நிலையத்தில் கடுமையான மழை பெய்து வந்தது.
- விபத்தில் சிக்கிய ஜெட் விமானத்தில் தீ பற்றியது.
மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஜெட் விமானம் ஓடுபாதையில் சறுக்கி விபத்தில் சிக்கியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆறு பயணிகள், இரண்டு பணியாளர்கள் என எட்டு பேர் இந்த ஜெட் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் காயமுற்றனர். இந்த சம்பம் இன்று (செப்டம்பர் 14) மாலை 5.02 மணிக்கு அரங்கேறி இருக்கிறது.
நல்ல வேளையாக இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. மும்பை விமான நிலையத்தில் கடுமையான மழை பெய்து வந்ததும், இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய ஜெட் விமானத்தில் தீ பற்றியது. எனினும், மீட்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தது.
விபத்தைத் தொடர்ந்து ஓடுபாதையில் இருந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, முறையான பாதுகாப்பு பரிசோதனைகள் நிறைவு பெற்று, அதனை தேசிய விமான போக்குவரத்து துறை உறுதிப்படுத்திய பிறகே ஓடுபாதையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
இந்த விபத்து மும்பை விமான நிலையத்தின் 27-வது ஓடுபாதையில் ஏற்பட்டது. மழை காரணமாக பாதையில் வழுவழுப்பாக இருந்ததும், 700 மீட்டர்கள் வரை பார்க்கக்கூடிய நிலை இல்லை என்று கூறப்படுகிறது. விபத்தை தொடர்ந்து ஓடுபாதையில் மற்ற விமானங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதன் காரணமாக கிட்டத்தட்ட ஐந்து விமானங்கள் மற்ற ஓடுபாதை வழியாக கிளம்பி சென்றன. விபத்தில் சிக்கியது லியர்ஜெட் 45 ரக ஜெட் விமானம் ஆகும். இதனை கனடாவை சேர்ந்த வான்வழி போக்குவரத்து நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த விமானம் வி.எஸ்.ஆர். வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை தெரிவித்து இருக்கிறது.