இந்தியா

வயநாட்டில் பிரியங்கா காந்தி இன்று 2-வது நாளாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்

Published On 2024-12-01 04:55 GMT   |   Update On 2024-12-01 04:55 GMT
  • பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
  • மோடி, அதானி போன்ற தொழில் அதிபர்களையும் மக்களையும் வெவ்வேறாக கருதுகிறார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி எம்.பி.யாக பதவியேற்றார்.

தொடர்ந்து அவர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வயநாடு வந்தார். அவருடன் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அவரது சகோதரருமான ராகுல்காந்தியும் வந்திருந்தார்.

அவர்கள் இருவரும் மலப்புரம், நிலம்பூர், வண்டூர், எடாவண்ணா, ஏர்நாடு பகுதிகளில் நடை பெற்ற பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, வயநாடு மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியுதவியை விடுவிக்காமல் பிரதமர் மோடி பாரபட்சமாக செயல்படுகிறார். குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டுமென அரசமைப்பு சட்டம் கூறுகிறது.

ஆனால் பிரதமர் மோடி, அதானி போன்ற தொழில் அதிபர்களையும் மக்களையும் வெவ்வேறாக கருதுகிறார் என்றார்.

பிரியங்கா காந்தி பேசும் போது, வயநாடு மக்களுக்கான என்னுடைய போராட்டம் தொடங்கிவிட்டது. உங்களது பிரச்சனைகள் என்ன என்பது எனக்கு தெரியும். அவற்றை தீர்த்து வைப்பது தான் எனது முதல் கடமை. பா.ஜ.க.வுக்கு அரசியல் மரியாதை எதுவும் தெரியாது.

நாட்டில் தேர்தல் நடை முரைகள் குறித்த நம்பிக்கை போய்விட்டது. நாட்டை நிலைநிறுத்தும் அடிப்படை அம்சங்களுக்காக நாம் போராட வேண்டும் என்றார். நேற்று பல்வேறு கூட்டங்களில் பங்கேற்ற ராகுல்காந்தி, அதன்பிறகு டெல்லி சென்றார்.

ஆனால் பிரியங்கா செல்லவில்லை. அவர் வயநாடு தொகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாளாக மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருக்கு கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அப்போது பேசிய பிரியங்கா காந்தி, பல வழிகளில் இன்று நாம் எதிர்கொள்ளும் அரசியல் சவால்கள், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு போன்றது என்றார். மேலும் வயநாடு மக்களின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் எனது குரல் தெரிவிக்கும் என்றார்.

Tags:    

Similar News