இந்தியா

வயநாட்டில் பிரியங்கா காந்தி நாளை பிரசாரம் தொடங்குகிறார்

Published On 2024-10-27 05:14 GMT   |   Update On 2024-10-27 05:14 GMT
  • 7 சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரிக்கிறார்.
  • மற்ற கட்சியினர் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி ஆதரவு திரட்டி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அவர் கடந்த 23-ந் தேதி தனது சகோதரரும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தியுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதன்பிறகு டெல்லி சென்ற அவர், வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்ட நாளை (28-ந்தேதி) வயநாடு வருகிறார். தொகுதியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரியங்கா காந்தி 7 சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.

இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ பயண விவரங்களை வண்டூர் தொகுதி எம்.எல்.ஏ. அனில் குமார் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

வயநாடு பாராளுமன்ற தொகுதியில் மக்களை சந்திப்பதற்காக பிரியங்கா காந்தி நாளை (திங்கட்கிழமை) வருகிறார். பகல் 12 மணிக்கு சுல்தான் பத்தேரியில் உள்ள மீனங்காடி பகுதியில் இருந்து அவர் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

தொடர்ந்து பனமரம் மானந்தவாடி, கல்பெட்டாவில் வைத்திரி அருகே பொழுதானா பகுதிகளுக்கும் சென்று ஆதரவு திரட்டுகிறார்.

நாளை மறுநாள் (29-ந் தேதி) காலை 10 மணிக்கு திருவம்பாடியில் எங்கப்புழா பகுதியில் இருந்து அவர் பிரசாரம் தொடங்குகிறார். ஏர்நாடு, வண்டூர், மலப்புரம் என 7 சட்டசபை தொகுதிகளுக்கும் பிரியங்கா காந்தி சென்று மக்களை சந்திக்கிறார். மாலை 5 மணிக்கு நீலம்பூரில் பிரசாரத்தை முடிக்கிறார்.

தொகுதியில் ஏற்கனவே தொகுதி அளவிலான மாநாடுகளை கட்சியினர் முடித்து விட்டனர். பூத் அளவிலான பணிகள் வெள்ளிக்கிழமைக்குள் முடிவடையும்.

பிரியங்கா காந்தி தனது 3-வது கட்ட சுற்றுப்பயணத்தின் போது அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வயநாடு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், கம்யூனிஸ்டு வேட்பாளர் சத்யன் மொகேரி ஆகியோர் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி ஆதரவு திரட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News