இந்தியா

மோடி மார்பில் அணிந்திருக்கும் தாமரை சக்கரவியூகத்தை கட்டுப்படுத்தும் 6 பேர்: ராகுல் காந்தி

Published On 2024-07-29 12:26 GMT   |   Update On 2024-07-29 12:26 GMT
  • மகாபாரத யுத்தத்தில் சக்கரவியூகத்தில் ஆறு பேரால் அபிமன்யூ சிக்கவைக்கப்பட்டு கொல்லப்படுவார்.
  • மோடி, அமித் ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி, அதானி தாமரை சக்கரவியூகத்தை கட்டுப்படுத்துகின்றனர்.

2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மீதான விவாதத்தின்போது மக்களவையில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இன்று உரையாற்றினார்.

அப்போது மகாபாரத்தில் அபிமன்யூ, ஆறு பேரால் உருவாக்கப்பட்ட சக்கரவியூகத்தில் சிக்கவைக்கப்பட்டு கொல்லப்படுகிறார். அதேபோல் ஆறுபேரால் தற்போது தாமரை வடிவிலான சக்கரவியூகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை ஆறு பேர் கட்டுப்படுத்துகின்றனர் என்றார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

மகாபாரத யுத்த கதையில் சக்கரவியூகத்தில் ஆறு பேரால் அபிமன்யூ சிக்கவைக்கப்பட்டு கொல்லப்படுவார்.

பத்மவியூகம் எனவும் அறியப்படும் சக்கரவியூகம் என்ற வார்த்தைக்கு தாமரை வடிவம் என்பது பொருள் என்பதை நான் சில ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளேன். 21-ம் நூற்றாண்டில் புதிய சக்கரவியூகம் உருவாக்கப்பட்டுள்ளது. அது தாமரை வடிவிலானது. இந்த உருவத்தை பிரதமர் மோடி அவரது மார்பில் அணிந்துள்ளார்.

அபிமன்யூவுக்கு என்ன நடந்ததோ, அதேபோல் இந்தியாவில் உள்ள இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நடந்து வருகிறது. இன்று சக்கரவியூகத்தின் மையத்தில் ஆறு பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் நாடு சிக்கியுள்ளது. மோடி, அமித் ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி, அதானி ஆகிய ஆறு பேரும் அதை கட்டுப்படுத்துகிறார்கள்.

(பெயரை குறிப்பிட்டதால் சபாநாயகர் இடைமறித்தார். அப்போது ராகுல் காந்தி நீங்கள் விரும்பினால் என்எஸ்ஏ, அம்பானி, அதானி பெயர்களை விட்டுவிடுகிறேன். 3 பெயர்களை எடுத்துக் கொள்கிறேன் என்றார்.)

மூன்று படைகள் சக்கரவியூகத்திற்கு பின்னணியாக உள்ளன.

முதல்படை: (ஏகபோக மூலதனத்தின் யோசனை)

இந்திய வளத்தின் ஒட்டுமொத்த உரிமைக்கும் இரண்டு பேரை அனுமதிப்பது. எனவே, 'சக்ரவ்யூ'வின் ஒரு அங்கம் நிதி அதிகாரத்தால் வருகிறது.

இரண்டாவது- அமைப்புகள்

இந்தியாவின் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை போன்ற அமைப்புகள்.

3-வது அரசியல் நிர்வாகிகள்

இந்த மூன்றும் இணைந்து சக்கரவியூகத்தின் இதயமாக இருந்து, இந்த நாட்டை சீரழித்து விட்டனர்.

மத்திய பட்ஜெட் நாட்டின் விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், சிறு தொழில் அதிபர்கள் ஆகியற்றிற்கு உதவி செய்து சக்கரவியூகத்தன் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் என எதிர்பார்த்தேன்.

ஆனால் நான் கண்டது என்னவென்றால் இந்த பட்ஜெட்டின் ஒரே நோக்கம் ஏகபோக வணிகத்தின் கட்டமைப்புகள், ஜனநாயகக் கட்டமைப்பையும் மற்றும் அரசு அமைப்புகளையும் அழிக்கும் அரசியல் ஏகபோகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவதாகும்.

இதன் விளைவு என்னவெனில்- பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் வரி தீவிரவாதத்தின் மூலம் இந்தியாவுக்கு வேலை கொடுத்தவர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தாக்கப்பட்டதாகும்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

Tags:    

Similar News