ஒடிசா ரெயில் விபத்து- சிபிஐ விசாரணைக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை
- ஒடிசா ரெயில் விபத்தில் இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர்.
- மனித தவறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஒடிசாவில் நிகழ்ந்த ரெயில் விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. பாலசோர் மாவட்டம் பஹனகா ரெயில் நிலையம் அருகே மெயின் லைனில் வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லூப் லைனில் திடீரென சென்று சரக்கு ரெயில் மீது மோத, எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் உள்ள மற்றொரு மெயின் லைனில் விழுந்துள்ளன. அந்த சமயத்தில் வந்த பெங்களூரு- ஹவுரா அதிவிரைவு ரெயில், தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது.
ஒடிசா ரெயில் விபத்தில் இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர். 1175 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் உள்ளவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மனித தவறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது. நிர்வாகத்திற்கு கிடைத்த தகவல்கள் மற்றும் பிற கேள்விகளையும் கருத்தில் கொண்டு, இந்த விபத்து தொடர்பாக மேல் விசாரணை செய்வதற்காக, முழு வழக்கையும் விசாரிக்கும்படி சிபிஐக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்திருப்பதாக ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.