பாஜக 24 காரட் தங்கம், காங்கிரஸ் துருப்பிடித்த இரும்பு: ராஜ்நாத் சிங் தாக்கு
- நாங்கள் இந்து- முஸ்லிம் என பாகுபாடு பார்ப்பதில்லை.
- பாரத்தில் (இந்தியாவில்) பிறந்த அனைவரும் பாரத மாதாவின் குழந்தைகள் என நாங்கள் நம்புகிறோம்.
மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆளும் பா.ஜனதா கட்சி தலைவர்கள் எதிர்க்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். அதேபோல் எதிர்க்கட்சி தலைவர்களும் ஆளும் பா.ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்கின்றன.
அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது, காங்கிரஸ் துருப்பிடித்த இரும்பு என விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக ராஜ்நாத் சிங் கூறுகையில் "நாங்கள் இந்து- முஸ்லிம் என பாகுபாடு பார்ப்பதில்லை. பா.ஜனதா எப்போதும் இந்து மற்றும் முஸ்லிம்களை பற்றி பேசுகிறது என்று மக்கள் சொல்கிறார்கள். நாங்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், யூதர்கள் என பாகுபாடு பார்ப்பதில்லை என சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
பாரத்தில் (இந்தியாவில்) பிறந்த அனைவரும் பாரத மாதாவின் குழந்தைகள் என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் பாகுபாடு பார்ப்பதில்லை. மக்களை ஏமாற்றி நாங்கள் முத்தலாக்கை முடிவுக்கு கொண்டு வரவில்லை. அது எங்களுடைய தீர்மானம் மற்றும் வார்த்தையாக இருந்தது.
தேர்தல் அறிக்கையில் நாங்கள் தெரிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம். அதனால் நான் பா.ஜனதா 24 காரட் தங்கம் போன்றது எனச் சொல்கிறேன்.
இந்தியாவில் மற்றும் உலகத்தில் உள்ள யாராலும் பா.ஜனதா கறை படிந்தது என விரலை தூக்கி காண்பிக்க முடியாது. காங்கிரஸ் 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அவர்களால் நாட்டைய உச்ச நிலைக்கு கொண்டு சென்றிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இதனால் அவர்களை துருப்பிடித்த இரும்பு எனச் சொல்கிறேன்" என்றார்.