இந்தியா (National)

காங்கிரஸ் வேட்பாளரின் நண்பரான சுரேஷ் பாபு வீட்டில் சிக்கிய 500 ரூபாய் நோட்டு கட்டுகளை படத்தில் காணலாம்.

காங்கிரஸ் வேட்பாளரின் நண்பர் வீட்டில் ரூ.2 கோடி சிக்கியது- தீவிர விசாரணை

Published On 2023-05-08 02:42 GMT   |   Update On 2023-05-08 02:42 GMT
  • மண்டியா மாவட்டம் மத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கே.எம். உதய் போட்டியிடுகிறார்.
  • சுரேசை அதிகாரிகள் பிடித்து மத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.

மண்டியா :

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இதற்கான பகிரங்க பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலையுடன் நிறைவடைகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல்கட்சியினர் பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்கொத்தி பாம்பாக இருந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் மண்டியா மாவட்டம் மத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கே.எம். உதய் போட்டியிடுகிறார். இவரது நண்பர்களான மத்தூர் தொட்டி வீதியை சேர்ந்த சுரேஷ் பாபு, ரமேஷ் ஆகியோர் வீடுகளில் பணம் பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு வினியோகிக்க இருப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணி அளவில் இருவரது வீடுகளில் 20-க்கும் மேற்பட்ட தேர்தல் அதிகாரிகள், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுரேஷ் பாபு வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. மொத்தம் 2 கோடி ரூபாய் பணம் சிக்கியது. அதற்கு உரிய ஆவணங்களும் இல்லை.

இதையடுத்து அந்த பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதுபோல் ரமேசின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரமும் சிக்கியது. இந்த பணத்தை வாக்காளர்களுக்கு வினியோகிக்க பதுக்கியதாக தெரிகிறது. இதையடுத்து சுரேசை அதிகாரிகள் பிடித்து மத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் சுரேஷ் பாபுவை கைது செய்து, வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் பதுக்கப்பட்டதா? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ரமேசிடமும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News