இந்தியா

 சத்குரு                            நிரஞ்சன் ரெட்டி

மண்ணை காப்பாற்ற முடியும் என்ற சத்குருவின் செயல் பாராட்டுக்குரியது- தெலுங்கானா வேளாண் துறை அமைச்சர் புகழாரம்

Published On 2022-06-17 11:45 GMT   |   Update On 2022-06-18 12:04 GMT
  • 6-வது மாநிலமாக தெலுங்கானா மாநிலத்தில் மண் காப்போம் இயக்கத்துடன் ஒப்பந்தம்
  • இந்தப் பொறுப்புணர்வை உருவாக்குவதில் சத்குருவின் செயல் விலைமதிப்பற்றது.

மண் வளத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி மண்ணைக் காப்போம் இயக்கம் என்ற உலகளாவிய விழிப்புணர்வு இயக்கத்தை லண்டனில் இருந்து மார்ச் 21-ம் தேதி தொடங்கிய சத்குரு, மோட்டார் சைக்கிளில், 27 நாடுகளில் 100 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளித்தார். தொடர்ந்து குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்ட்ரா ஆகிய 5 மாநிலங்கள் 'மண் காப்போம்' இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

இந்தியாவில் 6-வது மாநிலமாக தெலுங்கானா அரசு மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக 'மண் காப்போம்' இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா வேளாண் துறை அமைச்சர் நிரஞ்சன் ரெட்டியும் சத்குருவும் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை பரிமாறி கொண்டனர்.

அரங்கு நிறையும் அளவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அம்மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் கவுட், பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் தயாகர் ராவ், நடிகைசமந்தா, தெலுங்கு பாடகர்கள் ராம் மிரியாலா,மங்கலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மண் காப்போம் இயக்கத்திற்கு அரசின் முழு ஆதரவை தெரிவித்த வேளாண் அமைச்சர் நிரஞ்சன் ரெட்டி, பேசுகையில்,  சத்குரு, மண் வளத்தை மீட்டெடுக்கும் விஷயத்தில் நாங்கள் உங்களுடன் 100 சதவீதம் உடன்படுகிறோம் என்றார். 

உங்களுடைய வழிகாட்டுதல்களை பின்பற்றி, அதை நடைமுறைப்படுத்துவோம். தனி நபர்களின் தார்மீகப் பொறுப்புணர்வு மற்றும் அரசியல்வாதிகளின் பொறுப்புணர்வின் மூலம் நம்மால் மண்ணை காப்பற்ற முடியும். இந்தப் பொறுப்புணர்வை உருவாக்குவதில் சத்குருவின் செயல் விலைமதிப்பற்றது; பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதை தொடர்ந்து சத்குருவுடன் நடிகை சமந்தா அவர்கள் சுற்றுச்சூழல், ஆன்மீகம், மதம் என பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

அப்போது, இந்த வயதில் 27 நாடுகளுக்கு 26,000 கி.மீ உங்களால் எப்படி மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிகிறது. இது ஆச்சரியமாக உள்ளது. இது எப்படி சாத்தியம்?" என சமந்தா கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த சத்குரு, "மண் வளப் பாதுகாப்பு குறித்து நான் 30 வருடங்களுக்கு மேலாக பேசி வருகிறேன். நான் பேசும்போதெல்லாம், மக்கள் ஓ, இது அற்புதமான விஷயம், அருமையான விஷயம் என சொல்வார்கள் என்றும்,  ஆனால்,அதன் பிறகு அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் தூங்கிவிடுவார்கள் என்றும் கூறினார்.

அவர்களை விழிப்படைய செய்வதற்காக தான் நான் இந்த கடினமான  பயணத்தை மேற்கொண்டுள்ளேன், பல்வேறு விதமான தட்பவெப்ப நிலைகளில் 30.000 கி.மீ மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஆபத்தான பயணத்தில் நான் என்னை ஈடுப்படுத்தி கொண்டுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

நான் எடுத்த சவால் நன்றாக பலன் தந்துள்ளது, நான் பயணம் தொடங்குவதற்கு முன்பு மண் வளம் குறித்து யாரும் பெரிதாக பேசவில்லை. ஆனால், இப்போது பாருங்கள், எங்களுடைய சமூக வலைத்தள கணக்கீடுகளின்படி, உலகம் முழுவதும் சுமார் 280 கோடி பேர் மண் குறித்து பேசியுள்ளனர். இது சாதாரண விஷயம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.


Tags:    

Similar News