இந்தியா (National)

திருப்பதி லட்டுவில் கலப்படம் இல்லை என உச்சநீதிமன்றம் கூறவில்லை- பவன் கல்யாண்

Published On 2024-10-01 14:15 GMT   |   Update On 2024-10-01 14:15 GMT
  • திருப்பதி லட்டு விவகாரம் கோடான கோடி பக்தர்களின் உணர்வு சார்ந்த விஷயம்.
  • பவன் கல்யாண் வேங்கடேச பெருமானுக்கு 11 நாள் பரிகார தீட்சை விரதம் இருந்து வருகிறார்.

நாடு முழுவதும் உள்ள பக்தர்களை உலுக்கிய திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரிக்க கோரிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.-யான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) முன்னாள் தலைவர் ஒய்வி சுப்பா ரெட்டி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்களை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதாக சந்திரபாபு நாயுடு பொதுவெளியில் கருத்து வெளியிட்டது ஏன்? லட்டு சர்ச்சை குறித்து சிறப்பு குழு அமைக்கப்பட்டது என்றால் பொதுவெளியில் கருத்து வெளியிடுவதற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், திருப்பதி லட்டு விவகாரம் கோடான கோடி பக்தர்களின் உணர்வு சார்ந்த விஷயம். இதில் அரசியல் கூடாது. சிறப்பு விசாரணை குழு முடிவு வெளியாகும் வரை காத்திருக்காமல் ஏன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்க வேண்டும்?

கலப்பட நெய் தான் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என்பதற்கு தெளிவான பதிலே இல்லை. பிரசாதத்தில் கலப்படம் இருப்பது உறுதியாக தெரியாத நிலையில் கருத்து வெளியிட்டது ஏன்? என்று கண்டனம் தெரிவித்தனர். கடவுள் விவகாரத்தில் ஆந்திர அரசு அரசியலை தள்ளி வைக்க வேண்டும் என விரும்புகிறோம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

லட்டில் விலங்கு கொழுப்பு கலந்து தொடர்பாக ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் வேங்கடேச பெருமானுக்கு 11 நாள் பரிகார தீட்சை விரதம் இருந்து வருகிறார். இன்று விரதத்தை முடித்துக் கொண்டு திருப்பதி சென்று ஏழுமலையானை நேரில் தரிசனம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பவன் கல்யாண், "திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில் கலப்படம் இல்லை என உச்சநீதிமன்றம் கூறவில்லை. நெய் மாதிரிகள் சோதனை செய்யப்பட்ட தேதி குறித்து சில சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். அதை நாங்கள் தெளிவுபடுத்தி விடுவோம்.

கடந்த 5-6 வருடங்களாக கோவில்கள் அவமதிப்பு செய்யப்படுகின்றன. சுமார் 219 கோயில்கள் இழிவுபடுத்தப்பட்டன. ராமதீர்த்தத்தில் ராமர் சிலை சேதப்படுத்தப்பட்டது. எனவே, இது ஒரு பிரசாதம் பற்றிய பிரச்சினை அல்ல.

இந்தியா முழுவதும் உள்ள கோவில்களை பாதுகாக்க சனாதன தர்ம பரிக்ஷனா அறக்கட்டளையை உருவாக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த பரிகாரத்தை மேற்கொண்டு வருகிறேன். பரிகாரம் முடிந்த பிறகு இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவேன்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News