காற்று மாசுபாடு - நொய்டாவில் நவம்பர் 8 வரை பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்
- காற்று மாசுபாட்டால் நொய்டாவில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டது.
- அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு, கூட்டங்கள் நடத்த தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நொய்டாவில் உள்ள கவுதம் புத் நகரில் உயர் கல்வி மையங்கள் உள்பட சுமார் 1,800 பள்ளிகள் உள்ளன. நேற்று நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் காற்றின் தரக் குறியீடு கடுமையான அளவை எட்டியது. டெல்லிக்கு அடுத்தபடியாக மேற்கு உத்தர பிரதேச மாவட்டத்தின் சில பகுதிகளில் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், காற்று மாசுபாடு காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் வரும் செவ்வாய்க்கிழமை வரை 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்துமாறு கவுதம் புத் நகரின் மாவட்ட பள்ளி கண்காணிப்பாளர் தர்மவீர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முடிந்தவரை ஆன்லைனில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு அல்லது கூட்டங்கள் போன்றவை நடத்த தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.