இந்தியா

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சொந்த கிராமத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்

Published On 2024-08-06 08:48 GMT   |   Update On 2024-08-06 08:51 GMT
  • தேடுதல் பணியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் ஈடுபடுகிறார்கள்.
  • ஊரின் நிலையை பார்த்து கண்கலங்கிய அவர்கள், அதனை பொருப்படுத்தாமல் மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

திருவனந்தபுரம்:

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு கேரள மாநில மக்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள அனைவரையும் கவலையடைய செய்திருக்கிறது. அங்கு மீட்பு பணி இன்று 8-வது நாளாக தொடரும் நிலையில், பலியானவர்களின் உடல்கள் தொடர்ந்து சிக்கியபடி இருக்கிறது.

பலி எண்ணிக்கை 400-ஐ தாண்டிய நிலையில், 200-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகிறார்கள்.

பலியானவர்களின் சின்னாபின்னமான உடல்களை மிகவும் பாதுகாப்பாக அகற்றி எடுத்து வருகின்றனர். தேடுதல் பணியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களில் 2 வீரர்கள் தங்களது சொந்த கிராமத்தில் மீட்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

வயநாடு சூரல்மலை பகுதியை சேர்ந்தவர் ஜினோஷ் ஜெயன்(வயது42). அவரது உறவினர் பிரவீன் பிரகாஷ்(37). ஜினோஷ் அவுரங்காபாத்தில் ராணுவ பீரங்கி பிரிவிலும், பிரவீன் மெட்ராஸ் ரெஜிமன்டலிலும் பணியாற்றுகின்றனர். ஜினோசின் சகோதரர் ஜிதில் ஜெயன் தேசிய பேரிடர் மீட்புபடை வீரர் ஆவார்.

இவர்கள் 3 பேரும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தங்களது ஊரான சூரல்மலைக்கு கடந்த 31-ந்தேதி வந்தனர். அவர்கள் தங்களது ஊரில் இடிந்து கிடந்த கட்டிடங்கள், மண் குவியல் மற்றும் பாறைகளுக்கு அடியில் கிடந்த உடல்களை மீட்கும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். தங்களது ஊரின் நிலையை பார்த்து கண்கலங்கிய அவர்கள், அதனை பொருப்படுத்தாமல் மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

நிலச்சரிவில் இவர்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலர் இறந்து விட்டனர். அவர்களது உருக்குலைந்த உடல்களை வேதனையுடன் மீட்டிருக்கின்றனர். அவர்கள் எங்களது ஊரில் இப்படி ஒரு பேரிழப்பு ஏற்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுவோம் என்று எதிர்பார்க்கவில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.


தனக்கு ஏற்பட்ட வேதனையான அனுபவம் குறித்து தேசிய பேரிடர் மீட்பு படை வீரரான ஜிதில் ஜெயன் வேதனையுடன் கூறியதாவது:-

இந்த பயங்கர நிலச்சரிவில் எங்களின் வீடு தப்பியது. எனது நண்பர்கள் ஸ்ரீலேஷ், லெனின் மற்றும் சுமேஷ் ஆகியோர் பலியாகிவிட்டனர். இவர்களது உடலை நான் பார்த்தது, எங்களுக்கு தெரிந்தவர்களின் வீடுகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டது ஒரு வேதனையான அனுபவம்.

இதுபோன்று ஒரு தேடுதல் பணியில் ஈடுபடவேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. எங்களது சொந்த ஊர் என்பதால் இங்குள்ள நிலப்பரப்பு எங்களுக்கு பரிட்சயமாக இருந்தது. இது எங்களுடைய தேடுதல் முயற்சிக்கு உதவியது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலச்சரிவில் ராணுவ வீரர்களின் உறவினர்களான ஜெகதீஷ், அவரது மனைவி சரிதா, மகன் சரண் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களில் ஜெகதீஷ் மற்றும் சரணின் உடல்களை இவர்கள் தான் மீட்டுள்ளனர். ஆனால் சரிதாவின் உடல் இன்னும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News