இந்தியா

தாய் கண்டக்டராக இருந்த பஸ்சை இயக்கி டிரைவர் பணியை தொடங்கிய வாலிபர்

Published On 2024-11-06 09:27 GMT   |   Update On 2024-11-06 09:27 GMT
  • தனது முதல் நாள் வேலையை, ஸ்விப்ட் பஸ்சில் கண்டக்டராக பணி புரியும் தன்னுடைய தாயுடன் இணைந்து பார்க்க ஸ்ரீராக் விரும்பினார்.
  • யமுனா கண்டக்டராகவும், அவரது மகன் ஸ்ரீராக் டிரைவராகவும் ஒரே பஸ்ஸில் பணிபுரிந்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி யமுனா. இவர்களது மகன்கள் சித்தார்த், ராகேந்த், ஸ்ரீராக். யமுனா கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் 2009-ம் ஆண்டில் இருந்து தற்காலிக கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.

அவருக்கு தனது மகன் ஸ்ரீராக்கை அரசு போக்குவரத்து கழகத்தில் பணிக்கு சேர்த்து விட வேண்டும் என்பது நீண்ட கால கனவாக இருந்தது. இதற்காக அவர் தனது மகனை டிரைவராக பயிற்சி பெற செய்தார். பயிற்சி முடிந்ததும் வனத்துறையில் தற்காலிக டிரைவராக ஸ்ரீராக் பணிக்கு சேர்ந்தார்.

அதில் இருந்து கொண்டே அவர் அரசு போக்குவரத்துக் கழக டிரைவர் பணிக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். அதன் பலனாக கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் ஸ்ரீராக்கிற்கு டிரைவர் வேலை கிடைத்தது. அவருக்கு திருவனந்தபுரம் நகரில் ஓடக்கூடிய அரசு போக்குவரத்து கழக மின்சார ஸ்விப்ட் பேருந்தில் டிரைவர் வேலை கிடைத்தது.

தனது முதல் நாள் வேலையை, ஸ்விப்ட் பஸ்சில் கண்டக்டராக பணி புரியும் தன்னுடைய தாயுடன் இணைந்து பார்க்க ஸ்ரீராக் விரும்பினார். தன்னுடைய இந்த விருப்பத்தை போக்குவரத்து கழக அதிகாரியிடம் தெரிவித்தார். அதற்கு அவரும் சம்மதித்தார்.

இதையடுத்து திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவ கல்லூரிக்கு செல்லும் மின்சார பேருந்தை முதன்முதலாக ஸ்ரீராக் இயக்கினார். அவரின் விருப்பப்படி அவரது தாய் யமுனா அதே பஸ்ஸில் கண்டக்டராக இருந்தார்.

தாய் கண்டக்டராகவும், மகன் டிரைவராகவும் இருந்து இயக்கிய பஸ்சை பலரும் ஆர்வமாக பார்த்தனர். தாயும் மகனும் ஒரே பஸ்ஸில் பணிபுரிந்த அந்த நிகழ்வை காண யமுனாவின் மற்ற மகன்கள், ஸ்ரீராக்கின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் கிழக்கு கோட்டை பஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர்.

அவர்கள் முன்னிலையில் யமுனா கண்டக்டராகவும், அவரது மகன் ஸ்ரீராக் டிரைவராகவும் ஒரே பஸ்ஸில் பணிபுரிந்தனர். மேலும் வேலை இடைவேளையின்போது தாய்-மகன் இருவரும் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை ஒரே இடத்தில் அமர்ந்து பகிர்ந்து சாப்பிட்டனர். தன்னுடைய மகனுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் வேலை கிடைத்தது மட்டுமின்றி, அவர் ஓட்டிய பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிய நிகழ்வு யமுனாவுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது.

மகன் ஓட்டிய அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிய யமுனா 2022-ம் ஆண்டு கேரளா மாநிலத்தில் ஸ்விப்ட் பஸ்சின் முதல் பெண் ஊழியர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News