இந்தியா

பாராளுமன்றத்தில் தனியாக அமர்ந்திருந்த சோனியா காந்தி

Published On 2023-02-01 02:00 GMT   |   Update On 2023-02-01 02:00 GMT
  • தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவும், அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரையும் புன்னகையுடன் கட்டித்தழுவிக்கொண்டனர்.
  • சோனியா காந்தி தனிமையில் அமர்ந்திருந்தபோதும் அவரிடம் பலரும் வந்து வணக்கம் செலுத்தி நலம் விசாரித்துக்கொண்டனர்.

புதுடெல்லி :

ஜனாதிபதி முர்முவின் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டுக்கூட்டம், பாராளுமன்ற மையமண்டபத்தில் நடைபெற்றபோது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தனியாக வந்து அமர்ந்திருந்தார். வழக்கமாக அவர் தனது கட்சி எம்.பி.க்கள் புடைசூழ அமர்ந்திருப்பார்.

இந்த முறை தனியாக அமர்ந்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை.

காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான தலைவர்களும், எம்.பி.க்களும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் நடந்த ராகுல் காந்தியின் ஒற்றுமை இந்தியா பாத யாத்திரை நிறைவு விழாவில் கலந்துகொள்ளச்சென்றிருந்தனர். மோசமான வானிலை காரணமாக விமான புறப்பாடு தாமதம் ஆனதால் அவர்கள் ஸ்ரீநகரில் சிக்கிக்கொண்டனர்.

சோனியா காந்தி தனிமையில் அமர்ந்திருந்தபோதும் அவரிடம் பலரும் வந்து வணக்கம் செலுத்தி நலம் விசாரித்துக்கொண்டனர்.

சோனியா காந்தியும், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

சோனியா காந்தியின் அருகில் அமர்ந்திருந்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா அவரிடம் பேசிக்கொண்டதை காண முடிந்தது.

பின்வரிசையில் அமர்ந்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையனிடம் சோனியா நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் கட்சி வித்தியாசமின்றி உறுப்பினர்கள் ஒரே இருக்கையை பகிர்ந்து கொண்டு அமர்ந்திருந்ததையும் பார்க்க முடிந்தது.

அந்த வகையில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, தி.மு.க. எம்.பி. கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுக்கதா ராய், பா.ஜ.க. எம்.பி. நீரஜ் சேகர், சிவகுமார் உடாசி, நிஷிகந்த் துபே ஆகிய 6 பேரும் ஒன்றாக அமர்ந்திருந்ததை காண முடிந்தது.

பிரதமர் மோடியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, கட்சி வித்தியாசம் பாராமல் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவும், அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரையும் புன்னகையுடன் கட்டித்தழுவிக்கொண்டனர்.

பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் முன்னாள் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வானிடம் பேசிய பிரதமர் மோடி, அவரது தாயார் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்ததையும் பார்க்க முடிந்தது.

Tags:    

Similar News