இந்தியா

நடிகை சுமலதா எம்.பி. இன்று பா.ஜனதாவில் சேருகிறார்

Published On 2023-03-10 03:12 GMT   |   Update On 2023-03-10 03:12 GMT
  • மண்டியாவில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
  • சட்டசபை தேர்தலில் மண்டியாவில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது.

பெங்களூரு :

பிரபல நடிகையும், மண்டியா மக்களவை தொகுதி எம்.பி.யுமான சுமலதா மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி. அம்பரீஷ் கடைசி வரை காங்கிரசில் இருந்து மந்திரியாக பணியாற்றினார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நடிகை சுமலதா, மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு அவர் எந்த கட்சியிலும் சேராமல் தனித்தே செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் பா.ஜனதாவில் சேருமாறு அவருக்கு அக்கட்சி தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். இதுகுறித்து சுமலதா தனது ஆதரவாளர்களுடன் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆலோசனை நடத்திய வண்ணம் இருந்தார். அதனால் அவர் பா.ஜனதாவில் சேருவார் என்று தகவல் வெளியானது. வருகிற 12-ந் தேதி கர்நாடகம் வரும் பிரதமர் மோடி முன்னிலையில் அவர் பா.ஜனதாவில் சேர திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை திட்ட தொடக்க விழா அரசு விழா என்பதால், அதில் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடத்த இயலாது என்று பா.ஜனதா தலைவர்கள் கூறிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து சுமலதா இன்று (வெள்ளிக்கிழமை) பா.ஜனதாவில் சேருவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மண்டியாவில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். அந்த கூட்டத்தில் பா.ஜனதாவில் சேருவது குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அவர் வருகிற சட்டசபை தேர்தலில் மண்டியாவில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News