இந்தியா

ஆதித்யா-எல்1 விண்கல சுற்றுப்பாதை உயர்வு: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

Published On 2023-09-11 03:05 GMT   |   Update On 2023-09-11 03:05 GMT
  • பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி நடந்தது.
  • 3-வது முறையாக, பெங்களூரு தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து புவிவட்டப்பாதையில் இருந்து வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டு உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம், சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல்1 என்ற விண்கலம், கடந்த 2-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது பூமியில் இருந்து 125 நாட்கள் பயணம் செய்து, 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'லாக்ராஞ்சியன் புள்ளி-1'-ஐ சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் இந்த விண்கலம் ஈடுபடும்.

அதற்கு முன்னதாக ஆதித்யா-எல்1 விண்கலம் 16 நாட்கள் பூமியைச் சுற்றி வரும்போது 5 முறை சுற்றுப்பாதையின் அளவு உயர்த்தப்படுகிறது. அந்தவகையில் பூமியின் சுற்றுப்பாதையை உயர்த்துவதற்கான முதல்கட்டப் பணி கடந்த 3-ந் தேதி நடந்தது. அதன்படி, சுற்றுப்பாதை பூமியில் இருந்து குறைந்தபட்சம் 245 கிலோ மீட்டர், அதிகபட்சமாக 22 ஆயிரத்து 459 கிலோ மீட்டர் என்ற அளவில் இருந்தது.

தொடர்ந்து அடுத்து 2-ம் கட்டமாக கடந்த 4-ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் மீண்டும் சுற்றுப்பாதை உயர்த்தும் பணி நடந்தது. அதன்படி குறைந்தபட்சம் 282 கிலோ மீட்டர், அதிகபட்சமாக 40 ஆயிரத்து 225 கிலோ மீட்டர் என்ற நீள்சுற்றுவட்டப் பாதையில் ஆதித்யா விண்கலம் சுற்றிவந்தது.

பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இவ்வாறு சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி நடந்தது. தொடர்ந்து 3-வது கட்டமாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி நேற்று நடந்தது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, 'சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா-எல்1 விண்கலத்துக்கு 2 முறை வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று (நேற்று) 3-வது முறையாக, பெங்களூரு தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து புவிவட்டப்பாதையில் இருந்து வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டு உள்ளது.

அதன்படி, புதிய சுற்றுப்பாதையின் குறைந்தபட்ச உயரம் 296 கி.மீ., அதிகபட்சமாக 71 ஆயிரத்து 767 கி.மீ. என்ற அளவில் உள்ளது. தொடர்ந்து அடுத்த சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணியை வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணி அளவில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு உள்ளது.

தொடர்ந்து மொரீஷியஸ், பெங்களூரு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் மற்றும் போர்ட் பிளேயரில் உள்ள இஸ்ரோவின் தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களில் இருந்து ஆதித்யா-எல்1 விண்கலத்தை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த விண்கலம் 125 நாட்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள எல்-1 பகுதி அருகே நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கிருந்து சூரியனின் வெளிப்புற பகுதியை ஆதித்யா-எல்1 விண்கலம் ஆராய்ச்சி செய்யும்' என்றனர்.

Tags:    

Similar News