அக்னி-5 ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்ட போது நவீன கருவிகள் மூலம் உளவு பார்த்த சீன கப்பல்
- ஏவுகணை சோதனை, ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தீவில் நடத்தப்பட்டது.
- கப்பல் கடந்த பிப்ரவரி 23-ந்தேதி சீன துறைமுகமான கிங்டாவோவில் இருந்து புறப்பட்டது.
புதுடெல்லி:
5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக் கூடிய அக்னி-5 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிக்கரமாக நடத்தியது. இந்த ஏவுகணை ஒன்றுக்கு மேற்பட்ட இலக்குகளை தாக்கி விட்டு மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை சோதனை, ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தீவில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை சோதனையை சீன உளவுக் கப்பல் கண்காணித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒடிசா கடற்கரையில் ஏவுகணை சோதனை நடத்தப்படுவதாக இந்தியா அறிவித்த சில நாட்களில், சீன ஆராய்ச்சிக் கப்பலான சியான் யாங் ஹாங் 01 இந்தியாவின் கிழக்குக் கடற் பரப்பில் காணப்பட்டு உள்ளது.
இந்த கப்பல் கடந்த பிப்ரவரி 23-ந்தேதி சீன துறைமுகமான கிங்டாவோவில் இருந்து புறப்பட்டது. 4,425 டன் எடையுள்ள இக்கப்பல் கடந்த 6-ந் தேதி மலாக்கா ஜலசந்தியில் நுழைந்தது. 8-ந்தேதி நிக்கோபார் தீவுக்கும் இந்தியத் தீபகற்பத்திற்கும் இடையில் காணப்பட்டது.
பின்னர் 3 நாட்களில் வங்காள விரிகுடாவில் சோதனை செய்யும் இடத்திற்கு அருகே வந்துள்ளது. இந்தியா ஏவுகணை சோதனையை நடத்திய போது சியான் யாங் ஹாங் 01 விசாகப்பட்டினம் கடற்கரையில் இருந்து சுமார் 480 கிலோமீட்டர் தொலைவில் இருந்துள்ளது.
ஏவுகணை சோதனைக்கு முன், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் 3,550 கிமீ தொலைவில் விமானப் பயணத்திற்கான எச்சரிக்கை அறிவிப்பை அண்டை நாடுகளுக்கு கடந்த 7-ந்தேதி இந்தியா வெளியிட்டது. வங்காள விரிகுடா பகுதியில் மார்ச் 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை எந்த விமானமும் பறக்கக்கூடாது என்று இந்தியா எச்சரித்து இருந்தது.
3,500 கிலோமீட்டர்கள் வரை இந்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான் ஏவுகணை சோதனை நடந்த சமயத்தில் சீன உளவுக்கப்பல் அந்த பகுதியில் இருந்துள்ளது.
100 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பல் ஒரே நேரத்தில் 15 ஆயிரம் கடல் மைல் தூரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்யக்கூடிய ரிமோட் சென்சிங் கருவிகளை கொண்டுள்ளது. மேலும் அதிநவீன ஒலியைக் கண்டறியும் சென்சார்கள் இருக்கிறது. நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்படுத்தும் சிறு ஒலியைக் கூட இது உணரலாம்.
இது நீர்மூழ்கிக் கப்பல்களின் ஒலியியல் தடம் மற்றும் நீருக்கடியில் ஏவுகணை ஏவுதல் உள்ளிட்டவற்றையும் கண்டறியும் திறன் கொண்டது.
இந்தியா தடை விதித்திருந்த பகுதியில் சீனக்கப்பல் இருந்ததால் அது இந்தியாவின் ஏவுகணை சோதனையை அதிநவீன கருவிகள் மூலம் உளவு பார்க்க நோட்டமிட்டுள்ளது. இதனால் முழு ஏவுகணை சோதனையையும் பார்த்து அதன் வீச்சு மற்றும் திறன் பற்றிய தரவுகளை கணக்கிட்டிருக்கலாம்.
ஏற்கனவே சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்ற சியான் யாங் ஹாங் 03 அங்கிருந்து புறப்பட்டு இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.