ராகுலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன் சொல்கிறார்
- ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பா.ஜனதா கட்சியால் அல்ல.
- 3 பிரதமர்கள் உருவாக்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர் ராகுல். இன்னும் சமூக அமைப்புகள் பற்றி அறியவும் இல்லை.
சென்னை:
ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கத்தை தொடர்ந்து பா.ஜனதாவுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது.
இதுபற்றி பா.ஜனதா முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
அரசியலில் வேலை வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்த காங்கிரசார் தற்காலிக வேலை வாய்ப்பாக இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளார்கள்.
சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்ட போது கூட காங்கிரசார் வேலை பார்க்கவில்லை. எல்லாம் மேலே இருப்பவன் (தி.மு.க.) பார்த்து கொள்வான் என்ற மனநிலையிலேயே இருந்தார்கள்.
இப்போதும் ராகுல், எம்.பி. பதவியை தகுதி இழந்ததும் கே.எஸ்.அழகிரி உள்பட 4 பேர் மட்டும் போராட்டம் நடத்தி வேடிக்கை காட்டினார்கள்.
இன்று 76 இடங்களில் போராட்டம் நடக்கிறது. எப்படியும் 304 பேர் களத்தில் நிற்பார்கள்.
தற்போது ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பா.ஜனதா கட்சியால் அல்ல. கோர்ட்டு தீர்ப்பால். எனவே போராட வேண்டுமென்றால் ராகுல் காந்தி எந்த சமூகத்தை இழிவாக பேசினாரோ அதே சமூகத்தை எதிர்த்து போராட வேண்டும். அல்லது கோர்ட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும்.
3 பிரதமர்கள் உருவாக்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர் ராகுல். இன்னும் சமூக அமைப்புகள் பற்றி அறியவும் இல்லை.
சமூகங்களை பற்றி தெரியவும் இல்லை. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மரியாதைக்குரிய கார்கே போன்ற தலைவர்கள் ராகுலுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இந்த மாதிரி பேசக்கூடாது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். இனிமேலாவது ராகுல் திருந்த பார்க்க வேண்டும்.
பா.ஜனதாவுக்கு இந்த பிரச்சினையால் எந்த பாதிப்பும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.