இந்தியா

இந்தியாவின் 3-வது நிலவு திட்டமான சந்திராயன்-3 விண்கலம் ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும்

Published On 2023-05-26 09:10 GMT   |   Update On 2023-05-26 10:41 GMT
  • சந்திராயன்-3 விண்கலம் ரூ.615 கோடி செலவில் உருவாகி வருகிறது. தற்போது இந்த விண்கலத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது.
  • பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் விண்ணில் ஏவப்படும்.

திருவனந்தபுரம்:

இந்திய விஞ்ஞானிகள் விண்வெளி துறையிலும் சாதனை படைத்து வருகிறார்கள். அந்த வகையில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கு முன்னோட்டமாக சந்திரனுக்கு இந்தியா விண்கலன்களை அனுப்பி பரிசோதனை செய்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 2008-ம் ஆண்டு சந்திராயன்-1 விண்கலம் நிலவுக்கு சென்றது. இதில் வெற்றி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்ட முயற்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இதன்பயனாக கடந்த 2019-ம் ஆண்டு சந்திராயன் -2 விண்கலம் நிலவை நோக்கி பயணப்பட்டது.

இந்த விண்கலம் நிலவை தொட்டபோது குறிப்பிட்ட இலக்கை அடையும் முன்பு அதன் மேற்பகுதியில் தரை இறங்கியது. இதனால் இந்த சோதனையில் எதிர்ப்பார்த்த தகவல்கள் கிடைக்கவில்லை. என்றாலும் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியின் அடுத்த கட்ட சோதனைகளை இந்திய விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டனர்.

இதையடுத்து சந்திராயன்-3 விண்கலம் உருவானது. இது முந்தைய விண்கலத்தை போல் அல்லாமல் புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டது. மேலும் இந்த விண்கலம் நிலவுக்கு வெகு அருகில் தரைஇறங்கும் வகையிலும் நிர்மானிக்கப்பட்டது.

அதாவது நிலவுக்கு 100 கிலோ மீட்டர் அருகில் தரை இறங்கும்படி விண்கலம் வடிவமைக்கப்பட்டது. அதோடு மெதுவாக தரை இறங்கும்படியும் உருவாக்கப்பட்டது. நிலவில் தரை இறங்கிய பின்பு அங்கு பல்வேறு சோதனைகளை நடத்துவதற்கான கருவிகள் இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டு வருகிறது.

இந்த கருவிகள் மூலம் நிலவில் உள்ள தனிமங்கள் குறித்தும், அணு இருப்பு குறித்தும் சோதனை நடத்தப்படும். மேலும் வெப்பம் கடத்தும் திறன், நிலவில் தரை இறங்கும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்பதை கண்டறியும் சோதனையையும் இந்த விண்கலம் மேற்கொள்ளும்.

இதன்மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்பும்போது என்னென்ன பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கருதுகிறார் கள். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சந்திராயன்-3 விண்கலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

சந்திராயன்-3 விண்கலம் ரூ.615 கோடி செலவில் உருவாகி வருகிறது. தற்போது இந்த விண்கலத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் விண்ணில் ஏவப்படும்.

இதற்கான ஏற்பாடுகள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் சவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் நடந்து வருகிறது. இறுதி கட்ட பணிகள் முடிவடைந்ததும் வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி இந்த விண்கலத்தை விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News