இந்திய விண்வெளி நிலைய முதல் தொகுதியை 2028-ம் ஆண்டு விண்ணில் ஏவ திட்டம்- இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
- இந்தியாவிற்கான தனி ஆய்வு மையம் வருகிற 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் அமைக்கப்படும்.
- ஆய்வு மையத்தில் புவி மற்றும் இயற்கை சார்ந்த சீற்றங்களை முன்கூட்டியே கணிக்கும் வகையில் ஆய்வுகள் செய்யப்படும்.
'பாரதிய அந்தரிக்சா நிலையம்' (பி.ஏ.எஸ்.) என்று அழைக்கப்படும் முழுமையாக செயல்படும் இந்திய விண்வெளி நிலையத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வருகிற 2035-ம் ஆண்டுக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரும் ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த நிலையம், அடித்தளம், ஆய்வு மையம், அறிவியல் ஆய்வகம் மற்றும் 2 பணிகள் நடக்கும் பகுதி என 5 தொகுதி வடிவமைப்புடன் நிறுவப்பட உள்ளது.
இதில் ஒரு தொகுதி தவிர மீதம் உள்ள 4 தொகுதிகளிலும் தனிப்பட்ட சோலார் பேனல்கள் இருக்கும், '52 டன் எடை கொண்ட முதல் தொகுதியான 'பேஸ் மாட்யூல் (பி.ஏ.எஸ்-1) க்கான வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் வருகிற 2028-ம் ஆண்டுக்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பி.ஏ.எஸ்.-1 என்ற முதல் தொகுதி, உயிர் அமைப்புகள் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் போன்ற அத்தியாவசிய தொழில்நுட்பங்களுக்கான சோதனை அமைப்பாக செயல்படும், இது நுண் புவியீர்ப்பு விசையில் நீண்ட காலம் தங்குவதற்கும் உதவுகிறது' என்று மனித விண்வெளிப் பயணத்திட்டத்தின் (டி.எச்.எஸ்.பி.) இயக்குனர் ஹனுமந்த்ரே பாலுராகி கூறினார்.
விண்வெளி நிலையம் பூமிக்கு மேலே சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் ஒரு சுற்றுப்பாதையில் பராமரிக்கப்படுகிறது. இதில் விண்வெளி வீரர்கள் 3 முதல் 6 மாதங்கள் வரை தங்கி ஆய்வு செய்ய முடியும். இதற்கான முதல் தொகுதியானது தொடர்ச்சியான வெற்றிகரமான சோதனை நடவடிக்கைகளுக்குப் பிறகு எதிர்காலத்தில் பணியாளர்கள் பணிகளுக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்படும்.
இந்த முன்னோடி பணியானது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட உள்-வாகன செயல்பாடு மற்றும் 'எக்ஸ்ட்ராவெஹிகுலர்' செயல்பாடுகளை உள்ளடக்கியது, தற்போது மற்ற விண்வெளி நிறுவனங்களிலிருந்து பெறப்படுகிறது.
இந்தியாவிற்கான தனி ஆய்வு மையம் வருகிற 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் அமைக்கப்படும். இந்த ஆய்வு மையத்தில் புவி மற்றும் இயற்கை சார்ந்த சீற்றங்களை முன்கூட்டியே கணிக்கும் வகையில் ஆய்வுகள் செய்யப்படும். அத்துடன், மனித விண்வெளிப் பணிகளுக்கும் பி.ஏ.எஸ்-1 என்ற முதல் தொகுதி உதவிகரமாக இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.