நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியதற்கு இந்தப் பிரிவில் வழக்கா?... அபராதம் விதித்த நீதிமன்றம்
- மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்டவரின் செலவுத் தொகையை அரசு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மரைன் டிரைவ் பகுதியில் ஸ்விக்கி விநியோக நிர்வாகி கடந்த 2020-ம் ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, தெரு நாய் ஒன்று எதிர்பாராதவிதமாக திடீரென குறுக்கே வர, ஸ்விக்கி விநியோக நிர்வாகி மனாஸ் காட்போல் சென்ற மோட்டார் சைக்கிள் நாய் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் நாய் காயமடைய, பெண் ஒருவர் விபத்தை ஏற்படுத்திய மனாஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 279 உள்பட சில பிரிவுகளில் (மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல்) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது மனாஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தனக்கு எதிரான புகாரை எதிர்த்து மகாராஷ்டிரா மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை தீவிரமாக விசாரித்த ரேவதி மோகித் டேர், பிரித்விராஸ் சவான் கொண்ட டிவிசன் பெஞ்ச், இந்த எஃப்.ஐ.ஆர். நியாயமற்றது என கேன்சல் செய்ததோடு, பாதிக்கபட்ட மனாஸ்க்கு வழக்கு செலவாக 20 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில அரசுக்கு நீதிபதிகள் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளனர்.
நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியிருப்பதாவது:-
நாய், பூனை அவர்களது உரிமையாளர்களுக்கு குழந்தை அல்லது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் போன்று நடத்தப்படும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. ஆனால், அடிப்படையில் உயிரியல் என்ன சொல்கிறது என்றால், அவைகள் மனித உயிரினங்கள் இல்லை.
இந்த தண்டனைச் சட்டம் 279 மற்றும் 337 ஆகியவை, மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தல், அல்லது எந்த நபருக்கும் காயம் ஏற்படுத்துதல் என்பதை குறிப்பிடுகின்றன.
குறிப்பாக 279 பிரிவு, மற்றவர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு, உயிருக்கு ஆபத்து விளைவித்தல் ஆகிய குற்றத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே, சட்டப்பூர்வமாக பார்த்தால், இதற்கு பொருந்தாது. மனித உயிரினங்களை தவிர்த்து மற்றவைக்கு காயத்தை ஏற்படுத்தும்போது, இந்த சட்டப்பிரிவுகள் பயன்படுத்த அங்கீகரிக்கப்படவில்லை.
அந்த எஃப்.ஐ.ஆர். நியாயமான முறையில் பதிவு செய்யப்படவில்லை என்பது தெளிவுப்படுத்தப்படுகிறது. எந்தவொரு குற்றமும் வெளிப்படுத்தப்படாத போதிலும், போலீசார் மேற்படி வழக்குப் பதிவு செய்திருப்பதைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட நபருக்கு 20 ஆயிரம் அரசு வழங்க வேண்டும் என்பது பொருத்தமானதாக இருக்கும் என கருதுகிறோம்.
இந்த பணம் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காரணமாக இருந்து அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.