இந்தியா

நேபாள விமான விபத்தில் பலியான 4 பேரின் உடல்களை உ.பி. கொண்டுவர நடவடிக்கை- யோகி ஆதித்யநாத் உத்தரவு

Published On 2023-01-16 06:32 GMT   |   Update On 2023-01-16 10:03 GMT
  • நேபாளத்தில் நடந்த விமான விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது.
  • உயிரிழந்த இந்தியர்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் சிரம் தாழ்ந்த அஞ்சலி.

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தின் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்த 72 பேரும் பலியானார்கள்.

இந்த விமானத்தில் இந்தியாவை சேர்ந்த அபிஷேக் குஷ்வாகா, பிஷால் சர்மா, அனில் குமார் ராஜ்பர், சோனு ஜெய்ஸ்வால், சஞ்சயா ஜெய்ஸ்வால் ஆகியோரும் இருந்தனர். இவர்களில் 4 பேர் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த நிலையில் நேபாள விமான விபத்தில் இறந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்களின் உடல்களை கொண்டு வர அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

நேபாளத்தில் நடந்த விமான விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் உயிரிழந்த இந்தியர்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் சிரம் தாழ்ந்த அஞ்சலி. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்.

பகவான் ஸ்ரீராமரின் புனித பாதங்களில் மறைந்த ஆத்மாக்களுக்கு இடம் கொடுக்கட்டும். இறந்தவர்களின் உடல்களை உத்தரபிரதேசத்துக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags:    

Similar News