இந்தியா
null

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி- அமித்ஷா விளக்கம் அளிக்க கோரி கோஷம்

Published On 2023-12-18 08:08 GMT   |   Update On 2023-12-18 10:02 GMT
  • சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரி பிரகலாத் ஜோதி ஆகியோரின் வேண்டுகோளை நிராகரித்து அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
  • சில உறுப்பினர்கள் கைகளில் பதாகைகள் வைத்து இருந்தனர்.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ந்தேதி தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

இதற்கிடையே பாராளுமன்ற பாதுகாப்பில் மிகப் பெரிய குளறுபடி ஏற்பட்டது. 2 வாலிபர்கள் அத்துமீறி நுழைந்து வண்ணப் புகையை உமிழும் குப்பிகளை வீசியதால் பெரும் பதற்றமும், பீதியும் ஏற்பட்டது.

பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா விளக்கம் அளிக்க வலியுறுத்தி பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சியினர் கடந்த 14-ந்தேதி அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 14 எம்.பி.க்கள் எஞ்சிய கூட்டத் தொடர் முழுவதும் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டனர்.

பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக அமித்ஷா விளக்கம் அளிக்க கோரியும், 14 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்டை திரும்ப பெற வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 2 நாட்கள் அவை அலுவல்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

2 தினங்களுக்கு பிறகு பாராளுமன்றம் இன்று கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற மக்களவை காலை 11 மணிக்கு கூடியது. சபை கூடியதும் குவைத் மன்னர் ஷேக் நவாஸ் அல் ஜாபர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பாராளுமன்ற குறைபாடு தொடர்பான பிரசினையை எதிர்க்கட்சியினர் கிளப்பினர். சபையின் மைய பகுதிக்கு எதிர்கட்சி எம்.பி.க்கள் வந்து அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினார்கள்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களில் சிலர் கைகளில் பதாகைகளும் வைத்து இருந்தனர். சபைக்குள் பதாகைகள் கொண்டு வந்ததற்கு சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார். சபையின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் இருப்பதாக அவர் கூறினார்.

சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரி பிரகலாத் ஜோதி ஆகியோரின் வேண்டுகோளை நிராகரித்து அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

அமளியால் அவைத்தலைவர் சபையை 12 மணி வரை ஒத்திவைத்தார்.

மேல்சபையிலும் பாதுகாப்பு குறைபாடு பிரசினையை காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிளப்பினார்கள். மத்திய மந்திரி அமித்ஷா விளக்கம் அளிக்கக்கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். சில உறுப்பினர்கள் கைகளில் பதாகைகள் வைத்து இருந்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியால் அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.

முதல் 11.30 மணி வரை அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் ஒத்திவைத்தார். சபை கூடியதும் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

Similar News