சானிடரி நாப்கினுக்குள் மறைத்து வைத்து ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்திவந்த திருப்பூர் பெண்
- ஒரு பெண் பயணி, கிரீன் சேனல் வழியாக செல்ல முயன்றார்.
- பெண் மீது சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
திருவனந்தபுரம்:
துபாயில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கொச்சி நெடும்பச்சேரி விமான நிலையத்தில் துபாய் விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு பெண் பயணி, கிரீன் சேனல் வழியாக செல்ல முயன்றார். அவர் மீது சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரது உடலில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண், சானிட்டரி நாப்கினுக்குள் வைத்திருந்த 679 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.29 லட்சம் ஆகும். சானிட்டரி நாப்கினுக்குள் மறைத்துவைத்து தங்கத்தை கடத்தி வந்த அந்த பெண் திருப்பூரை சேர்ந்தவர் ஆவார். அவரை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.