ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையையொட்டி களை கட்டிய சேவல் சண்டை
- இளைஞர்கள் குவிந்ததால் சேவல் சண்டை பெரும் வரவேற்பை பெற்றது.
- ஆந்திராவில் பெரிய அளவில் 30 இடங்களில் சேவல் சண்டை நடந்தது.
திருப்பதி:
ஆந்திராவில் நேற்று சங்கராந்தி பண்டிகை கோலபாலமாக கொண்டாடப்பட்டது. சங்கராந்தி பண்டிகையையொட்டி நடத்தப்படும் சேவல் சண்டை தொடங்கியது.
கிருஷ்ணா, என்.டி.ஆர், மேற்கு கோதாவரி கிழக்கு, கோதாவரி, கோணசீமா , ஏலூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கன்னவரம், சிஞ்சிநாடா, பூபால பள்ளி, திருவூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
டிஜிட்டல் திரைகள் பேனர்கள் கடைகள் ஓட்டல்கள் துரித உணவகங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்ததால் சேவல் சண்டை பெரும் வரவேற்பை பெற்றது.
சேவல் சண்டைக்கு ஆந்திர மாநில அரசு தடை விதித்து இருந்தாலும் வரவேற்பு அதிக அளவில் இருந்ததால் கண்டும் காணாமல் இருந்து விட்டனர்.
பல்வேறு கிராமங்களில் இருந்து ரூ.2 லட்சம் முதல் அதற்கு மேற்பட்ட விலையுயர்ந்த சேவல்கள் கொண்டு வரப்பட்டு இருந்தன. சென்னை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சாப்ட்வேர் என்ஜினியர்கள் திரளாக வந்திருந்தனர்.
சேவல்கள் மீது ரூ.50 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரை பணத்தை பந்தயமாக கட்டினார். இதனால் ஒரே நாளில் பல கோடி ரூபாய் கைமாறியதாக கூறப்படுகிறது.
நேற்று ஆந்திராவில் பெரிய அளவில் 30 இடங்களில் சேவல் சண்டை நடந்தது.
3 நாட்கள் நடைபெறும் போட்டிகளில் பல கோடி வரை பந்தயம் நடைபெறும் என சேவல் சண்டை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.