இந்தியா

மூடநம்பிக்கையால் 7 தலைமுறைகளாக தீபாவளி கொண்டாடாத கிராமம்

Published On 2023-11-11 04:41 GMT   |   Update On 2023-11-11 05:29 GMT
  • உள்ளூரில் பெண் எடுத்தவர்கள் தலை தீபாவளி கூட கொண்டாட முடியாமல் உள்ளனர்.
  • படித்த இளைஞர்கள் கூட தீபாவளி கொண்டாட முன்வரவில்லை.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள ரனஸ்தலம் அருகே புன்னானா பாலம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இதில் 95 சதவீதத்திற்கும் அதிகமாக புன்னானா என்ற தலைமுறையினர் உள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

அன்று தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த புன்னானா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆண் குழந்தையை பாம்பு கடித்தது. இதில் அந்த குழந்தை இறந்தது.

மேலும் தீபாவளி கொண்டாடிய பிறகு 3-வது நாளில் 2 காளைகள் துரதிர்ஷ்டவசமாக இறந்தன. இது அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவங்களால் அந்த கிராம மக்கள் தீபாவளியை கொண்டாடினால் துரதிர்ஷ்டம் வந்துவிடும் என்று நம்பத் தொடங்கினர். இதனால் ஆண்டுதோறும் அவர்கள் தீபாவளி திருநாளை கொண்டாடுவதில்லை.

தலைமுறை தலைமுறையாக எப்பொழுதும் தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படித்த இளைஞர்கள் கூட தீபாவளி கொண்டாட முன்வரவில்லை.

அங்குள்ளவர்கள் யாருக்கும் தீபாவளி கொண்டாட தைரியம் இல்லை என கூறுகின்றனர். தலை தீபாவளி கொண்டாடுபவர்கள் வெளியூர்களில் பெண் எடுத்திருந்தால் அவர்கள் மாமனார் வீட்டுக்கு சென்று தீபாவளியை கொண்டாடலாம்.

ஆனால் உள்ளூரில் பெண் எடுத்தவர்கள் தலை தீபாவளி கூட கொண்டாட முடியாமல் உள்ளனர்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியர் புன்னனா நரசிம்மலூ (வயது 66) என்பவர் கூறியதாவது:-

எங்கள் கிராமத்தில் தீபாவளி மற்றும் நகுல சவிதி பண்டிகைகள் கொண்டாட கூடாது என விதி உள்ளது.

நான் பிறந்து வளர்ந்தது முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடி பார்த்ததில்லை. தீபாவளி கொண்டாட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கு எங்கள் கிராம மக்களுக்கு பல்வேறு வழிகளில் கல்வி கற்பிக்கவும் ஊக்குவிக்கவும் நான் முயற்சித்தேன்.

அது பலனளிக்கவில்லை. என் மகன் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் நான் தடையை மீறி தீபாவளி கொண்டாட முயன்றதால் அவன் இறந்து விட்டான் என கிராமத்தில் வதந்தி பரவி விட்டது.

கிட்டத்தட்ட 7 தலைமுறைகளாக எங்கள் கிராமத்தில் மூடநம்பிக்கை காரணமாக தீபாவளி பண்டிகை கொண்டாடாமல் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News